செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

Published On 2017-09-28 13:58 GMT   |   Update On 2017-09-28 13:58 GMT
சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், வட மாவட்டங்களிலும் பரவலாக இன்று மழை பெய்தது.
சென்னை:

வங்க கடல் பகுதியில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆந்திராவின் வடக்கு பகுதி நோக்கி நகர்ந்துவிட்டது. இதன் காரணமாக இன்று தமிழகத்தின் வடமாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் காலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியிருந்தது.

இந்நிலையில், இன்று மாலை 6 மணியளவில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், சென்ட்ரல், அண்ணாசாலை, அசோக் நகர், கிண்டி, பரங்கிமலை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிடட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்தது.

இந்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையில் வேலை முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் கனமழை பெய்ததால் சாலையில் தேங்கிய தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
Tags:    

Similar News