செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்காமல் கப்பலை வெளியேற்ற கூடாது: மீனவ சங்கம் வலியுறுத்தல்

Published On 2017-09-26 01:44 GMT   |   Update On 2017-09-26 01:44 GMT
சென்னை எண்ணூர் கடலில் 2 கப்பல்கள் மோதியதால் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்காமல் கப்பலை வெளியேற்ற கூடாது என மீனவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ராயபுரம்:

சென்னை எண்ணூர் கடல் பகுதியில், கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி ‘டான் காஞ்சீபுரம்’ என்ற கப்பலும், சரக்கு கப்பலும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் ‘டான் காஞ்சீபுரம்’ கப்பல் சேதமடைந்து, அதில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

விபத்தில் சிக்கிய ‘டான் காஞ்சீபுரம்’ கப்பல், எண்ணூர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி மீனவ சங்கம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்த நிலையில் ‘டான் காஞ்சீபுரம்’ கப்பலை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து வெளியேற்ற முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து அகில இந்திய மீனவ சங்கத்தின் செயல்தலைவரும், செய்தி தொடர்பாளருமான நாஞ்சில் ரவி நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கப்பல் மோதிய விபத்தில் எண்ணூர் கடலில், 29 ஆயிரத்து 141 டன் கச்சா எண்ணெய் கொட்டியுள்ளது. ஆனால், அது மூடி மறைக்கப்பட்டு, குறைந்த அளவிலான கச்சா எண்ணெய் கொட்டியதாக சொல்லி, பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு, தலா ரூ.5 ஆயிரம் மட்டுமே நிவாரணம் கொடுக்கப்பட்டது.

அமெரிக்காவில், இது போன்று கடலில் எண்ணெய் கொட்டிய விவகாரத்தில், அந்த நாட்டு அரசுக்கு, கப்பல் நிர்வாகம், சுமார், 4 ஆயிரத்து 525 பில்லியன் டாலரை கொடுத்தது. அது நம் நாட்டின் கணக்கின் படி சுமார், 29 ஆயிரம் கோடியாகும்.

மேலும், கடலில் கச்சா எண்ணெய் கொட்டியதால், மீன்வளம் குறைந்து விடும் என்பதற்காக 5 ஆண்டுகளுக்கு, நிவாரணம் கொடுத்தனர். இங்கும் கடல் பகுதியில் மீன்வளம் 80 சதவீதம் குறைந்து விட்டது. 20 சதவீதம் மீன்கள் தான் கிடைக்கிறது.

இதனால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் என 3 மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய நிவாரணம் வழங்காமல், ‘டான் காஞ்சீபுரம்’ கப்பலை, எண்ணூர் துறைமுகத்தில் இருந்து வெளியேற்ற முயற்சி நடக்கிறது.

இது தொடர்பாக, நாங்கள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். கோர்ட்டு உத்தரவு வரும் வரை இங்கு இருந்து கப்பலை வெளியேற்ற கூடாது. பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் தர வேண்டும். இல்லையென்றால், துறைமுகத்துக்குள் கப்பல்கள் மறிப்பு போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது நிர்வாகிகள் குப்பன், பரணி தரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். 
Tags:    

Similar News