செய்திகள்

திண்டிவனத்தில் தொடர் கொள்ளை: வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது

Published On 2017-09-25 12:07 GMT   |   Update On 2017-09-25 12:07 GMT
திண்டிவனத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்:

திண்டிவனம் பகுதியில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

இந்த தனிப்படை போலீசார் திண்டிவனம் காவேரிபாக்கம் ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு நடந்து சென்று கொண்டிருந்த 2 பேரை தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் மத்தியபிரதேச மாநிலம் அசோக்நகர் மாவட்டம் மூன்றிறாபாதிரா கிராமத்தை சேர்ந்த காளிசரண் (வயது29), அனில் (28) ஆகியோர் என்பது தெரிந்தது.

மேலும் அவர்கள் திண்டிவனம் ஜெயபுரம் பகுதியை சேர்ந்த கஜேந்திரன் வீட்டில் இருந்து 250 பவுன் நகை மற்றும் ஜெரோம் என்பவரின் வீட்டில் இருந்து 50 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.

மேலும் கொள்ளையடித்த நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக வைத்திருந்ததும் தெரிந்தது. இதையடுத்து காளிசரண், அனில் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 400 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய அதே மாநிலம் குணா மாவட்டத்தை சேர்ந்த 4 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் மத்தியபிரதேசம் விரைந்து உள்ளனர்.

இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்த துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையிலான தனிப்படையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் பால்சுதர், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், குர்ஷித்பாஷா மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டி பரிசு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

திண்டிவனம் பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மீது கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் பொம்மைகள், பூட்டு ஆகியவற்றை விற்பனை செய்வது போன்று பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு, பின்னர் அந்த வீடுகளில் புகுந்து கொள்ளை சம்பவத்தை நடத்தி வந்ததும் தெரிந்தது என்று கூறினார்.

Tags:    

Similar News