செய்திகள்

கோவை அருகே விபத்து: மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து 2 வாலிபர்கள் மரணம்

Published On 2017-09-22 09:54 GMT   |   Update On 2017-09-22 09:54 GMT
கோவை அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 22). ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார்.

கோவை கணபதி அருகே சின்னவேடம்பட்டியில் நண்பர்களுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை தேடி வந்தார். இவருடன் ஊட்டியை சேர்ந்த ஹேரன் ஜோசப்(20), ரவிகுமார்(22) உள்பட 6 பேர் தங்கி உள்ளனர். அனைவருமே படித்து முடித்து விட்டு வேலை தேடி வருகின்றனர்.

இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை மாற்ற முடிவு செய்தனர். துடியலூர் சாலையில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேற முன்தொகை கொடுத்து நேற்று இரவு பொருட்களை எடுத்து மாற்றினர்.

வாகனத்தில் பொருட்களை ஏற்றி விட்டு பின்னால் அனைவரும் தங்களது மோட்டார் சைக்கிளில் சென்றனர். பிரசாந்த் ஒரு உயர் ரக மோட்டார் சைக்கிளில் செல்ல பின்னால் ஹேரன் ஜோசப் அமர்ந்திருந்தார்.

இரவு 9 மணி அளவில் சி.எம்.எஸ். காலனி பகுதியில் சென்ற போது சாலையோரம் இருந்த பள்ளத்தில் இவர்களது மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில் பிரசாந்த், ஹேரன் ஜோசப் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்து சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ரவிகுமார் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் முன்னால் சென்ற நண்பர்களுக்கு இதுகுறித்து தகவல் கூறினார். அவர்களும் அங்கு வந்து பலியான நண்பர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேதபரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

பிரசாந்த் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றுள்ளார். பள்ளத்தை பார்ததும் திடீரென பிரேக் பிடித்ததால் தூக்கி வீசப்பட்டு இருவரும் பலியாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ரவிகுமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News