செய்திகள்
ஸ்கூட்டரில் சென்று முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆய்வு செய்த காட்சி.

தெருவிளக்குகள் எரியவில்லை என புகார்: இரவில் வீதி, வீதியாக ஸ்கூட்டரில் சென்று நாராயணசாமி ஆய்வு

Published On 2017-09-14 04:45 GMT   |   Update On 2017-09-14 04:45 GMT
புதுவை நகரம், புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் தெரு விளக்குகள் எரியவில்லை என அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி இரவில் வீதி, வீதியாக ஸ்கூட்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி:

புதுவை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் தெரு விளக்குகள், உயர்மின் கோபுர விளக்குகள் எரிவதில்லை. இதுதொடர்பாக பொதுமக்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் பலமுறை புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த புகார் மீது ஆய்வு செய்ய நேற்று இரவு 8.30 மணியளவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுவை எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து திடீரென ஸ்கூட்டரில் புறப்பட்டார். அவருடன் மற்றொரு ஸ்கூட்டரில் அமைச்சர் கமலக்கண்ணன் சென்றார்.

மி‌ஷன் வீதி, புஸ்சி வீதி, ஆம்பூர்சாலை, அரவிந்தர் வீதி, அண்ணாசாலை, எஸ்.வி. பட்டேல் சாலை, கருவடிக்குப்பம், கிழக்கு கடற்கரை சாலை, மடுவுப்பேட், லாஸ்பேட்டை, டி.வி. நகர், கிருஷ்ணா நகர், கொக்கு பார்க், ராஜீவ்காந்தி சிலை, வழுதாவூர் சாலை, மேட்டுப்பாளையம், முத்திரையர்பாளையம், மூலகுளம், ரெட்டியார்பாளையம், காமராஜர் சாலை, நெல்லித்தோப்பு, புதிய பஸ் நிலையம், முதலியார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நள்ளிரவு 11 மணி வரை சென்று நாராயணசாமி ஆய்வு செய்தார்.

அப்போது பல்வேறு இடங்களில் தெரு விளக்குகள், உயர்மின் கோபுர விளக்குகள் எரியாமல் இருந்ததை கண்ட நாராயணசாமி இதற்கான காரணம் குறித்து மின்துறை அதிகாரிகளிடம் கேட்டார்.

மேலும் எரியாமல் உள்ள மின் விளக்குகளை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News