செய்திகள்

நீட்தேர்வுக்கு எதிராக மறியல்: மாணவர் அமைப்பினர் 19 பேர் சிறையில் அடைப்பு

Published On 2017-09-13 11:06 GMT   |   Update On 2017-09-13 11:07 GMT
நீட்தேர்வுக்கு எதிராக மறியல் ஈடுப்பட்ட மாணவர் அமைப்பினர் 19 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை:

நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த போராட்டத்தின் போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையிலும் செயல்படுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் கோர்ட்டு தடையை மீறி மாணவர்களும் மாணவர் அமைப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்று சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையிலான போராட்டங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளி மாணவிகளை மறியலில் ஈடுபட தூண்டியதாக மாணவர் அமைப்பினர் 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கல்லூரி மாணவர்கள் 13 பேர் மீதும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இருந்து மாணவர் அமைப்பினர் கோட்டையை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அங்கிருந்து புதுப்பேட்டை வழியாக அமைதியான முறையில் ஊர்வலமாக சென்று ஆல்பர்ட் தியேட்டர் அருகில் உள்ள சந்திப்பில் முடிக்க வேண்டும் என்று போலீசார் நிபந்தனை விதித்திருந்தனர். ஆனால் ஊர்வலத்தில் சென்றவர்கள் திடீரென புதுப்பேட்டை பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதில் கல்லூரி மாணவர்கள், மாணவர் அமைப்பினர் 100 பேர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 19 பேர் போராட்டத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதுடன் போலீசாரின் நிபந்தனைகளையும் மீறியது தெரிய வந்தது. இவர்கள் மட்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதுப்பேட்டை பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டவர்கள் அண்ணாசாலை பகுதிக்கு சென்றும் மறியல் செய்ய திட்டமிட்டனர். இதுபற்றிய ரகசிய தகவல் எழும்பூர் உதவி கமி‌ஷனர் சுப்பிரமணிக்கு கிடைத்தது. இதனால் அவர் உஷாரானார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அண்ணாசாலை பகுதிக்கு செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் காரணமாக அண்ணா சாலையில் நேற்று காலையில் நடைபெற இருந்த போராட்டம் தடுக்கப்பட்டது.

Tags:    

Similar News