செய்திகள்

குட்கா விவகாரத்தில் நோட்டீஸ்: தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 15 நாள் அவகாசம் கேட்டு கடிதம்

Published On 2017-09-05 09:01 GMT   |   Update On 2017-09-05 09:01 GMT
குட்கா விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க 15 நாள் அவகாசம் கேட்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை செயலாளரிடம் கடிதம் அளித்தனர்.
சென்னை:

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குட்கா புகையிலை பொருளுடன் சபைக்கு வந்தனர்.

இதையடுத்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் சட்டசபையின் உரிமை குழு கூடி எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு பதில் அளிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் 20 எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க கால அவகாசம் கேட்பது என முடிவு செய்யப்பட்டது.

இன்று காலையில் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ.க்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு 8 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை செயலகத்திற்கு சென்றனர். அங்கு சபாநாயகர் இல்லாததால் சட்டசபை செயலாளர் பூபதியை சந்தித்து 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை கொடுத்தனர்.

அதில், உரிமை குழு நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளிப்பதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டிருந்தது.

21 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் இந்த கடிதத்தை எம்.எல்.ஏ.க்கள் சேகர் பாபு (துறைமுகம்), சுதர்சனம் (மாதவரம்), தாயகம் கவி (திரு.வி.க.நகர்), ரவிசந்திரன் (எழும்பூர்), கார்த்திக் (கோவை), அம்பேத்குமார் (வந்தவாசி), கார்த்திகேயன் (வேலூர்), மு.பெ.கிரி (செங்கம்) ஆகியோர் அளித்தனர்.

இவர்களுடன் தி.மு.க. கொறடா சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு எம்.எல்.ஏ. ஆகியோரும் சென்றிருந்தனர்.

பின்னர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில், உரிமை குழு நோட்டீசுக்கு பதில் அளிக்க 15 நாள் அவகாசம் கேட்டிருப்பதாக தெரிவித்தார்.
Tags:    

Similar News