செய்திகள்

மெரினா கடற்கரை - பா.ஜனதா அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு

Published On 2017-09-02 08:05 GMT   |   Update On 2017-09-02 08:05 GMT
தியாகராயநகரில் உள்ள பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமாக கமலாலயத்தை முற்றுகையிட பல்வேறு மாணவர் அமைப்பினர் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:

நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடிய மாணவி அனிதா தனது மருத்துவ படிப்பு கனவு தகர்ந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் - மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால் மெரினா கடற்கரையில் ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டக்காரர்கள் யாரும் நுழைந்து விடாத வகையில் மெரினா கடற்கரை பகுதியை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய - மாநில அரசுகளே காரணம் என்று கூறி மாபெரும் போராட்டம் நடத்த மாணவ - மாணவிகள் பெருந்திரளாக மெரினா கடற்கரையில் குவிய வேண்டும் என்று ‘வாட்ஸ்-அப்’ மற்றும் சமூக வலை தளங்களில் செய்திகள் பரவியது.

மேலும் மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மக்கள் அதிகாரம் மையம் அறிவித்துள்ளதால் தலைமை செயலகம், மருத்துவ கல்வி இயக்ககம், தலைமை தபால் நிலையம், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், அரசு பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகம் போடப்பட்டுள்ளது.

தியாகராயநகரில் உள்ள பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமாக கமலாலயத்தை முற்றுகையிட மே 17 இயக்கம் உள்பட பல்வேறு மாணவர் அமைப்பினர் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News