செய்திகள்

வாணியம்பாடியில் கியாஸ் சிலிண்டர் மினிலாரி தீப்பிடித்தது - பொதுமக்கள் ஓட்டம்

Published On 2017-08-23 17:01 GMT   |   Update On 2017-08-23 17:01 GMT
வாணியம்பாடியில் கியாஸ் சிலிண்டர் மினி லாரி தீப்பிடித்து எரிந்ததில் அப்பகுதில் உள்ள பொதுமக்கள் பயத்தில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
வாணியம்பாடி:

வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் கியாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மினிலாரியில் நேற்று கியாஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு நியுடவுனில் உள்ள வீடுகளுக்கு வினியோகம் செய்ய 50-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களை எடுத்து சென்றனர்.

அப்போது அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே செல்லும்போது திடீரென மினிலாரியின் அடிபகுதியில் தீப்பற்றியது. மினிலாரியில் இருந்து புகை மண்டலமாக அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் அதில் இருந்த ஊழியர்கள் அவசரம், அவசரமாக மினிலாரியில் இருந்த சிலிண்டர்களை தூக்கி வெளியில் தள்ளிவிட்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் உதவியுடன் சாலையில் இருந்த மண்ணை அள்ளி வீசி தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

இச்சம்பவத்தின் போது வாணியம்பாடி - ஆலங்காயம் செல்லும் சாலையில் வந்த பஸ் பயணிகள் பஸ்சை விட்டு இறங்கி நாலாபுறமும் அலறியடித்து ஓடினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இச்சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே துணை மின்வாரிய நிலையத்தில் உள்ள மின்மாற்றி ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்ததாலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News