செய்திகள்

கோவை, கூடலூரில் யானை தாக்கி 2 பெண்கள் பலி

Published On 2017-08-22 10:21 GMT   |   Update On 2017-08-22 10:21 GMT
கோவையில் காட்டு யானை தாக்கி பெண் பலியானதால் அப்பகுதி மக்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் மசினகுடி மாவனல்லா குரூப் அவுஸ் பகுதியை சேர்ந்தவர் மாராத்தாள் (வயது 60). ஆதிவாசி பெண். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மாசி (55). இவர்கள் 2 பேரும் நேற்று சிகூர் வனப்பகுதிக்கு விறகு பொறுக்கச்சென்றனர்.

அப்போது புதர் மறைவில் இருந்த காட்டுயானை பெண்களை விரட்டியது. இதில் மாசி தப்பி ஓடிவிட்டார். மாராத்தாள் தப்பி ஓடும்போது தவறி விழுந்தார். அவர் சுதாரித்து எழுவதற்குள் மாராத்தாளை காட்டுயானை மிதித்து துதிக்கையால் சுழற்றி வீசியது. இதில் படுகாயம் அடைந்த மாராத்தாள் பரிதாபமாக இறந்தார்.

காட்டுயானை தாக்கி மூதாட்டி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அச்சமடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.

காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி பெட்ட வாய்த்தலையை சேர்ந்தவர் தவசி. இவரது மனைவி சாரதா (50). இவர் மற்ற உறவினர்களுடன் கோவை ஆலாந்துறைக்கு விவசாய கூலிவேலைக்கு வந்தனர். கடந்த 1 வாரமாக வெங்காயம் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

ஆலாந்துறை பட்டியால்கோவில்பதி தோட்டத்தில் தங்கியிருந்து வேலை செய்து வந்த சாரதா இன்று காலை இயற்கை உபாதைக்காக அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.

அப்போது புதர்மறையில் இருந்த காட்டுயானை சாரதாவை துதிக்கையால் சுழற்றி காலில்போட்டு மிதித்து கொன்றது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஆலாந்துறை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

காட்டு யானை தாக்கி பெண் பலியானதால் இந்த பகுதி மக்களும் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

Tags:    

Similar News