செய்திகள்

போடி தாலுகா அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து

Published On 2017-08-21 11:45 GMT   |   Update On 2017-08-21 11:45 GMT
போடி தாலுகா அலுவலகத்தில் நள்ளிரவு 10 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல பொருட்கள் எரிந்து நாசமானது.

தேனி:

தேனி மாவட்டம் போடி-தேவாரம் சாலையில் தாலுகா அலுவலகம் உள்ளது. இதில் மொத்தம் 3 தளங்கள் உள்ளன. தரை தளத்தில் இ-சேவை மையம், ஆவணங்கள், கோப்புகள் மற்றும் தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு யாரும் உரிமைகோர வில்லை என்றால் அந்த வாகனங்களும் இங்கு நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அலுவலகத்தை ஊழியர்கள் பூட்டி சென்றனர்.

நள்ளிரவு 10 மணி அளவில் தாலுகா அலுவலகத்தில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்தபோது தீ பற்றி எரிந்தது.

இதனையடுத்து போடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இருந்தபோதும் பல பொருட்கள் தீ விபத்தில் எரிந்து நாசமானது. நாசமான பொருட்கள் குறித்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது.

போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News