செய்திகள்

அவினாசி அருகே மாட்டு வியாபாரி வீட்டில் நகை - பணம் கொள்ளை

Published On 2017-08-19 11:08 GMT   |   Update On 2017-08-19 11:08 GMT
அவினாசி அருகே மாட்டு வியாபாரி வீட்டில் நகை - பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவினாசி கருக்கம் பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 65). விவசாயி. மாட்டு வியாபாரமும் செய்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி (60). இவர்களுக்கு சம்பத்குமார் (33) என்ற மகன் உள்ளார்.

மகனுக்கு திருமணம் செய்வது தொடர்பாக ஜோதிடம் பார்க்க முத்துசாமி மனைவியுடன் நேற்று காங்கயம் சென்றார். மகன் சம்பத்குமார் தனது தாத்தா முருகண்ணாவுடன் வேலூர் சென்று விட்டார்.

ஜோதிடம் பார்த்து விட்டு மாலை தம்பதி வீட்டுக்கு வந்தனர். வீட்டின் கேட்டை திறந்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்தது. மகன் தான் வந்திருப்பான் என்று நினைத்த தம்பதி உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டில் இருந்து பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறி கிடந்தன. அதிர்ச்சியடைந்த தம்பதி பீரோவை சோதனை செய்து பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.3 லட்சத்து 54 ஆயிரத்து 500 திருட்டு போயிருந்தது. இது தவிர 9 பவுன் நகையையும் கொள்ளையர்கள் திருடிச்சென்று விட்டனர்.

கொள்ளையர்கள் உள்ளே புகுந்ததை அறிந்த அவர்கள் வளர்க்கும் நாய் கொள்ளையை தடுக்க முயற்சி குரைத்தது. கதவு மற்றும் சுவற்றில் ஆவேசமாக பிராண்டியது.

இதை அறிந்த கொள்ளையர்கள் நாய்க்கு மயக்க பிஸ்கட் கொடுத்தனர். அதனை தின்ற நாய் மயங்கியது. கொள்ளை குறித்து அவினாசி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இது தவிர மோப்ப நாய் சம்பவ நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை விசாரணையில் மாடு வியாபாரி வீட்டை விட்டு வெளியே செல்லும்போது வீட்டின் சாவியை அருகிலேயே வைத்து விட்டு செல்வார். இதனை நோட்டமிட்ட நபர்கள் தான் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.

இது தவிர மாடு விற்பனையின்போது முத்துசாமியின் வீட்டுக்கு வந்து சென்ற வியாபாரிகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருக்கம்பாளையத்தில் இதுவரை கொள்ளை சம்பவம் நடந்ததே இல்லை. இதனால் போலீஸ் மற்றும் மோப்ப நாய்களை அந்த பகுதி பொதுமக்கள் பீதியுடன் பார்த்தனர்.

Tags:    

Similar News