செய்திகள்

பிளஸ்-2, ‘நீட்’ மதிப்பெண்கள் அடிப்படையில் தனித்தனி தரவரிசை பட்டியல் தயார்: அதிகாரிகள் தகவல்

Published On 2017-08-18 03:22 GMT   |   Update On 2017-08-18 03:22 GMT
மருத்துவ கலந்தாய்வுக்காக பிளஸ்-2 மற்றும் ‘நீட்’ தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தனித்தனியாக தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:

தமிழ்நாட்டில் உள்ள 22 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 2 ஆயிரத்து 593 இடங்கள் உள்ளன. 11 சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 783 இடங்கள் உள்ளன. மேலும் ஒரு அரசு பல் மருத்துவக்கல்லூரியில் 85 இடங்கள் உள்ளன. 11 சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 610 இடங்கள் வரும்.



நீட் தேர்வு தொடர்பான பிரச்சினை காரணமாக தொடர்ந்து மருத்துவ மாணவர் சேர்க்கை காலதாமதமாகி வருகிறது. இந்த நிலையில் மருத்துவ கல்வி இயக்குனரக அலுவலகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 55 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால் தரவரிசை பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை.

மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலா? ‘நீட்’ தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையிலா? என்று தெரியாமல் தமிழக மாணவர்கள் குழம்பி போய் உள்ளனர்.

இது குறித்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி தேர்வுக்குழு அதிகாரிகள் கூறியதாவது:-

மருத்துவ கல்வியில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. பிளஸ்-2 தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தினால் ரேண்டம் எண் வெளியிடப்பட்டு பின்னர் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும்.

‘நீட்’ தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால் ரேண்டம் எண் தேவை இல்லை. இதற்கிடையே பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையிலும், ‘நீட்’ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் தரவரிசை பட்டியல் தயாரித்து வைத்திருக்கிறோம்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News