செய்திகள்

வழிபாட்டு தலங்களில் சட்டத்துக்கு உட்பட்டு ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-08-17 03:47 GMT   |   Update On 2017-08-17 03:47 GMT
எந்த மதத்தினராக இருந்தாலும், சட்டவிதிகளுக்கு உட்பட்டு வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை:

பொள்ளாச்சி ஐக்கிய ஜமாத்தின் தலைவராக இருப்பவர் ஷாநவாஸ் கான். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘இஸ்லாமிய மத வழக்கப்படி, நாள் ஒன்றுக்கு 5 முறை தொழுகை நடத்த வேண்டும். பொள்ளாச்சியில் உள்ள பள்ளிவாசல்களில் சட்டவிதிகள் அனுமதிக்கும் ஒலி அளவின் அடிப்படையில், ஒலிபெருக்கி பயன்படுத்துகிறோம். ஆனால், ஒலியின் அளவு அதிகமாக உள்ளது என்று கூறி, ஒலிபெருக்கிகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்கின்றனர். இதற்கு தடைவிதிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை திருப்பித்தர உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் நேற்று விசாரித்து, பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மத வழிபாடு என்பது ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமையாகும். ஆனால், எந்த மதங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒலி மாசு சட்ட விதிகளுக்கு உட்பட்டு, வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும்.

மேலும், போலீஸ் அதிகாரிகள் இதுவரை பறிமுதல் செய்துள்ள பொருட்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய மனுதாரர் அனுமதி கேட்டார். எனவே, செப்டம்பர் 1-ந் தேதிக்குள் அந்த விவரங்களை தாக்கல் செய்யவேண்டும். வழக்கு விசாரணையை 4-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News