செய்திகள்

திண்டுக்கல் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி

Published On 2017-08-12 05:42 GMT   |   Update On 2017-08-12 05:42 GMT
திண்டுக்கல் அருகே டெங்கு காய்ச்சல் பாதிக்கப் பட்டு பள்ளி மணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
சின்னாளபட்டி:

திண்டுக்கல் அருகே சின்னாளபட்டி பூஞ்சோலை நாயக்கர் தெருவை சேர்ந்தவர் பெருமாள். கொத்தனாரான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். 2-வது மகன் சண்முகபாண்டி (வயது5) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 20 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சண்முகபாண்டி அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து திண்டுக் கல் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சண்முகபாண்டி பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில், சின்னாளபட்டியில் சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்பட வில்லை. இதனால் டிராக்டர் மூலம் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி வருகின்றனர். இவர்கள் எங்கிருந்து தண்ணீரை கொண்டு வருகின்றனர் என தெரியவில்லை. சுகாதாரமற்ற குடிநீரால் இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.

எனவே சுகாதார அதிகாரிகள் இப்பகுதியில் முகாமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர். இது குறித்து பேரூராட்சி அதிகாரிகள் தெரிவிக்கையில், குடிநீரை காய்ச்சி குடிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொசு மருந்து அடிக்கும் பணி துப்புரவு பணியாளர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News