செய்திகள்

போலீசாரை கண்டு பொதுமக்கள் பயப்பட வேண்டாம்: நண்பர்கள் தின விழாவில் கமி‌ஷனர் பேச்சு

Published On 2017-08-07 10:28 GMT   |   Update On 2017-08-07 10:28 GMT
நல்லது செய்யவே காத்திருக்கிறோம், போலீசாரை கண்டு பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என்று நண்பர்கள் தின விழாவின்போது கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.
சென்னை:

நண்பர்கள் தினத்தையொட்டி சென்னையில் போலீசார் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நண்பர்கள் தின விழா நடந்தது.

இதில் அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், மூத்த குடிமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். அப்போது போலீஸ் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இனிப்புகளும் கொடுக்கப்பட்டது. இந்த விழாவில் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே உள்ள பயத்தை போக்குவதற்கும், இடைவெளி இல்லாத நிலையை உருவாக்குவதற்கும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

போலீசார் எங்கிருந்தோ வரவில்லை. உங்களைப் போல ஒரே சமூகத்தில் இருந்துதான் நாங்களும் வந்துள்ளோம். போலீசாரை போல கடினமாக உழைப்பவர்கள் யாரும் இல்லை.

ஒரு பகுதியில் செயின் பறிப்பு தொடர்ந்து நடந்துவிட்டால் யாருமே தூங்குவதில்லை. சென்னையில் 10 நாட்களாக தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. அதனை எப்படி தடுப்பது என்று கடும் முயற்சி செய்தோம். இதனால் டெல்லியில் இருந்து வந்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளுக்காக போலீஸ் அதிகாரிகளை தைரியமாக நேரில் சந்தித்து புகார் செய்ய வேண்டும். போலீசை கண்டு பயப்படக்கூடாது. உங்களுக்கு நல்லது செய்யவே நாங்கள் காத்திருக்கிறோம்.

போலீஸ் நிலையங்களில், குறிப்பிட்ட நேரத்தில் இன்ஸ்பெக்டர்கள் கட்டாயம் புகார் மனுக்களை வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆன்லைனில் நீங்கள் புகார் செய்யலாம். அதற்கான ரசீதையும் உங்களால் பெற முடியும்.

இந்த விழாவில் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனின் மனைவியும், கூடுதல் டி.ஜி.பி.யுமான சீமா அகர்வாலும் கலந்து கொண்டார். இவர் மாநில குற்ற ஆவண காப்பகத்தில் பணியில் உள்ளார்.

கூடுதல் கமி‌ஷனர்கள் சாரங்கன், ஜெயராம், பெரியய்யா, இணை கமி‌ஷனர் அன்பு, துணை ஆணையர்கள் சரவணன், சுந்தர வடிவேல் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதேபோல முகப்பேர் மங்கள் ஏரியிலும் நண்பர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. அண்ணாநகர் துணை கமி‌ஷனர் டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் நடந்த இந்த விழாவில் உதவி கமி‌ஷனர் கமில்பாஷா, நொளம்பூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கி பேனா உள்ளிட்ட பொருட்களையும் பரிசளித்தனர்.

சென்னையில் இதே போல அனைத்து பகுதிகளிலும் போலீசார் நண்பர்கள் தின விழாவை பொதுமக்களோடு சேர்ந்து கொண்டாடினார்கள்.
Tags:    

Similar News