செய்திகள்

மே 17 இயக்கத்தினரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து வழக்கு: பதிலளிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-08-03 08:30 GMT   |   Update On 2017-08-03 08:30 GMT
மே 17 இயக்கத்தினர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உள்துறை செயலாளர், சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஆகியோர் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை:

இலங்கையில் நடந்த இனப் படுகொலையை கண்டித்து ஒவ்வொரு ஆண்டும் சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது.

இந்த ஆண்டு, மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சியை கடந்த மே 21-ந்தேதி நடத்த மே 17 இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தினால், மெரினா கடற்கரையில் எந்த ஒரு போராட்டத்துக்கும் போலீசார் அனுமதி வழங்காமல் இருந்து வருகின்றனர்.



இந்த நிலையில் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை தடையை மீறி நடத்தியதாக மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகிய நான்கு பேரை மட்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை போலீஸ் கமி‌ஷனர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து 4 பேர் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் மனுவுக்கு பதிலளிக்கும்படி உள்துறை செயலாளர், சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Tags:    

Similar News