செய்திகள்

அசோகச் சக்கரத்தை பயன்படுத்திய அதிகாரி மீது நடவடிக்கை கோரி வழக்கு: தமிழக டி.ஜி.பி.க்கு ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-07-22 10:39 GMT   |   Update On 2017-07-22 10:39 GMT
ஜனாதிபதி, கவர்னர் பயன்படுத்தும் அசோகச் சக்கரத்தை பயன்படுத்திய அதிகாரி மீது நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக டி.ஜி.பி. பதில் அளிக்கும் படி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பூலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ஒடிசா மாநிலத்தில் அக்கவுண்ட் ஜெனரலாக பணியாற்றி வந்த தமிழகத்தை சேர்ந்த அம்பலவாணன், கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள மத்திய தேயிலை வாரியத்தின் செயல் இயக்குனராக பணியாற்றினார்.

அப்போது அவர் தன் காரில் அசோகச் சக்கரத்தை பொறுத்தியிருந்தார். ஆனால், அசோகச் சக்கரத்தை இந்திய ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர்கள் மட்டுமே காரில் பொறுத்திக் கொள்ள முடியும்.

இந்த அசோகச் சக்கரம் பொறுத்தப்பட்ட காரில் அலுவல பணிக்காக மட்டுமல்லாமல், தனிப்பட்ட பணிக்காகவும் சென்று வந்தார்.

இதுகுறித்து மத்திய உள்துறை செயலாளர், தமிழக தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பினேன். இந்த மனுவை பரிசீலித்த மத்திய உள்துறை செயலாளர், இந்த புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி தமிழக தலைமை செயலாளர், தமிழக டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் பரிந்துரை செய்தார். இதையடுத்து டி.ஜி.பி.யின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்ட போலீசார், அம்பலவாணனின் டிரைவரிடம் விசாரித்துள்ளனர். அந்த டிரைவர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

ஆனால், அம்பலவாணன் பயன்படுத்திய அசோகச் சக்கரம் இப்போதும் குன்னூர் தேயிலை வாரிய அலுவகத்தில் தான் உள்ளது. எனவே என் புகாரின் அடிப்படையில், மத்திய அரசு அதிகாரி அம்பலவாணன் மீது வழக்குப்பதிவு செய்யும்படி தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ரமேஷ் விசாரித்தார். அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் ராஜா ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து மனுவுக்கு தமிழக டி.ஜி.பி.யின் பதிலை கேட்டு தெரிவிக்கும்படி அரசு வக்கீல் கோவிந்தராஜூக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News