செய்திகள்

வேப்பந்தட்டை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2017-07-19 16:57 GMT   |   Update On 2017-07-19 16:57 GMT
வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டப்பாடி ஊராட்சியில் பாலையூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினி யோகம் செய்யப்படவில்லை. மேலும் அந்த பகுதியில் பழுதான நிலையில் உள்ள 5 அடிபம்பு களும் பழுது நீக்கம் செய்யப்படவில்லை. இதனால் அந்த ஊரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வேப்பந் தட்டை- நெய்குப்பை சாலையில் காலிக்குடங்களுடன் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வி.களத்தூர் போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். நீண்ட நேரம் ஆகியும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரும் நேரில் வரவில்லை என்று கூறி அரசு டவுன் பஸ் மீது சிலர் கல்வீச முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர், தாசில்தார் பாரதி வளவன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் எனவும், பழுதடைந்த அடிபம்புகள் அனைத்தும் சரிசெய்யப்படும் எனவும் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் வேப்பந்தட்டை- நெய்குப்பை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News