செய்திகள்

டி.ஐ.ஜி. ரூபா பணியிட மாற்றம் நேர்மைக்கு கிடைத்த பரிசு: மாலைமலர் இணையதள கருத்துக் கணிப்பு

Published On 2017-07-18 15:06 GMT   |   Update On 2017-07-18 15:06 GMT
கர்நாடக சிறைத்துறை டிஐஜி பணியிட மாற்றம் குறித்து வாசகர்களிடம் கருத்து கணிப்பு நடத்தியதில் ‘நேர்மைக்கு கிடைத்த பரிசு’ என்ற கருத்தினை ஆதரித்து பெருவாரியான வாசகர்கள் வாக்களித்துள்ளனர்.
சென்னை:

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி வரை லஞ்சம் கொடுத்து எல்லா சலுகைகளையும் அனுபவித்து வருவதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக டி.ஜி.பி.க்கு அனுப்பிய கடிதங்களில் சசிகலா என்னென்ன சொகுசு வசதிகளை சிறைக்குள் அனுபவித்து வருகிறார் என்பதை பட்டியலிட்டு இருந்தார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், புகார் கூறிய சிறைத் துறை டி.ஐ.ஜி. ரூபா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசின் இந்த டிரான்ஸ்பர் நடவடிக்கையை பலரும் விமர்சித்தவண்ணம் உள்ளனர்.

இந்த விவகாரத்தில் மக்களின் பொதுவான கருத்து என்னவாக இருக்கும் என்பதை அறிய மாலைமலர் டாட்காம் இணையதளம் கருத்துக் கணிப்பு நடத்தியது. நான்கு பிரிவுகளில் வாசகர்கள் கருத்தை பதிவு செய்யும் வகையில் கருத்துக் கணிப்பு இருந்தது. அதாவது, கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது நேர்மைக்கு கிடைத்த பரிசு, சரியான நடவடிக்கை, பண பலம், கருத்து இல்லை ஆகிய கருத்துக்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

இதில், பெருவாரியான வாசகர்கள், ‘நேர்மைக்கு கிடைத்த பரிசு’ என்ற கருத்தையே தேர்வு செய்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இன்று இரவு நிலவரப்படி 66 சதவீத வாசகர்கள் இந்த கருத்தை ஆதரித்து வாக்களித்துள்ளனர். பண பலம் என்று 22 சதவீத வாசகர்களும், சரியான நடவடிக்கை என்று 10 சதவீத வாசகர்களும், கருத்து இல்லை என 2 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
Tags:    

Similar News