செய்திகள்

விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்தாதது ஏன்?: கிரண்பேடிக்கு அய்யாக்கண்ணு கேள்வி

Published On 2017-07-09 12:25 GMT   |   Update On 2017-07-09 12:25 GMT
மத்திய அரசின் பிரதிநிதியாக இருந்து கொண்டு விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்தாதது ஏன்? என்று கவர்னர் கிரண்பேடிக்கு அய்யாக்கண்ணு கேள்வி எழுப்பினார்.

சேதராப்பட்டு:

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் இன்று திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகம் மற்றும் புதுவையில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வங்கி கடனை ரத்து செய்ய கோரி டெல்லியில் தொடர்ந்து 41 நாட்கள் போராட்டம் நடத்தினோம்.

அப்போது எங்களை சந்தித்த தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். ஆனால் விவசாயிகளை ஏமாற்றி விட்டார்.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக மத்திய அரசு ரூ. 21 ஆயிரத்து 708 கோடி ஒதுக்குவதாக அறிவித்தது. ஆனால், இதுவரை ஒரு பைசா கூட வழங்கவில்லை. வறட்சி நிவாரண நிதி வழங்காமல் இடு பொருள் மானியமாக ரூ. 1740 கோடி வழங்கி உள்ளது. வறட்சி நிவாரண நிதி வழங்காமல் எதிர்கால விவசாயத்துக்கு இடுபொருள் மானியம் வழங்குவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு லாபகரமான விலையை கொடுத்தாலே போதும். மகாநதியில் 2 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் வீணாக போகிறது. இது போல் கோதாவரி, கிருஷ்ணா நதியில் தண்ணீர் வீணாகிறது. நதிகளை இணைத்தாலே போதும். தண்ணீருக்கு பஞ்சம் இருக்காது.

கரும்புக்கு உரிய விலை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், வழங்கவில்லை. பெரிய விவசாயிகளின் கடன் தள்ளுபடியை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல் முறையீடு செய்ய மாட்டோம் என்று சொன்னார். ஆனால், மேல் முறையீடு செய்துள்ளனர்.

இதுபோன்று விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 14-ந் தேதி முதல் டெல்லியில் தொடர் போராட்டம் மேற்கொள்ள உள்ளோம்.

டெல்லியில் இறந்தாலும் இறப்போமே தவிர, உரிமைகளை பெறாமல் திரும்ப மாட்டோம். தமிழகத்தை போல் புதுவையிலும் வறட்சியால் விவசாயம் பொய்த்து விட்டது. இதற்காக விவசாயிகளின் கடனை புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தள்ளுபடி செய்தார்.


ஆனால் கவர்னர் கிரண்பேடி அதற்கு ஒப்புதல் வழங்க மறுக்கிறார். மத்திய அரசின் பிரதிநிதியாக இருந்து கொண்டு புதுவை விவசாயிகளின் நலனில் ஏன் அக்கறை செலுத்த மறுக்கிறார்? கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு ஏன் விவசாயிகள் மீது அக்கறை செலுத்தவில்லை?

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது புதுவை பிரதேச விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் அய்யாக்கண்ணுவை சந்தித்து டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் தாங்களும் பங்குபெறுவதாக உறுதி அளித்தனர்.

Tags:    

Similar News