செய்திகள்

கொடைக்கானலில் பலத்த மழை

Published On 2017-07-05 10:23 GMT   |   Update On 2017-07-05 10:23 GMT
கொடைக்கானலில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி நிலவியது.

இதன் காரணமாக வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு அரியவகை மரங்கள் மற்றும் மூலிகைகள் எரிந்து நாசமானது. நகர் பகுதிக்கு குடிநீர் வழங்கும் நகராட்சி நீர்தேக்கத்திலும் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது.

இதனால் பொதுமக்களுக்கு 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகளும் குடிநீர் தட்டுப் பாடு காரணமாக அவதிப்பட்டனர். லாட்ஜ் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் தண்ணீரை ஒரு லோடு ரூ.9 ஆயிரம் வரை வாங்கும் நிலை ஏற்பட்டது.

இதனால் வாடகை மற்றும் உணவு பண்டங்களின் விலை பல மடங்காக உயர்ந்தது. எனவே மழை எப்போது பெய்யும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர்.

கேரளாவில் கடந்த மாதம் 30-ந் தேதி பருவ மழை தொடங்கியது. கொடைக்கானலில் சாரல் மழை மட்டுமே அவ்வப்போது பெய்து வந்தது. கடந்த ஒரு வாரமாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் நேற்று மதியம் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இதனால் குளிர்ந்த சீதோசனம் நிலவியது.

நகராட்சி நீர்தேக்கத்திலும் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. இந்த மழை நீடித்தால் வரும் காலங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம்.

விவசாயிகளும் பருவ மழையை எதிர்நோக்கி உருளை கிழங்கு, காரட், பீன்ஸ், சவ்சவ், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்களை நிலங்களை உழுது பயிரிட்டிருந்தனர். தற்போது பெய்து வரும் மழையினால் அவை செழித்து வளர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News