செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக்கூடாது?: உயர்நீதிமன்றம் கேள்வி

Published On 2017-06-27 11:05 GMT   |   Update On 2017-06-27 11:51 GMT
அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட 20 முக்கிய கேள்விகளை தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ளது.
சென்னை:

அரசுப் பள்ளியில் பயிலும் தன்னுடைய மகனுக்கு ஆங்கில வழி கல்வி வேண்டும் என்று அவனது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை முறையாக செய்ய தவறினால் மாணவர்களை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று கூறினார். 

மேலும், அரசு பள்ளிகளில் அரசு ஆசிரியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட 20 முக்கிய கேள்விகளை நீதிபதி கிருபாகரன் தமிழக அரசுக்கு எழுப்பினார். அவற்றில் சில கேள்விகள் பின்வருமாறு:-

அரசு ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்?

ஆசிரியர்களை வருகையை சிசிடிவி கேமரா கொண்டு கண்காணிக்காதது ஏன்?

பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது ? 

ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா?

தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா? 

ஆசிரியர் சங்கங்கள் தொடங்க ஏன் தடை விதிக்கக்கூடாது?

2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன, அதில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்?

பெற்றோர் தனியார் பள்ளிகளை நாட காரணம் என்ன?

இந்த விவகாரத்தில் 2 வாரத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணை அடுத்த மாதம் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News