செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே மதுக்கடையை மூடக்கோரி அரசு பஸ் சிறை பிடிப்பு

Published On 2017-06-25 12:10 GMT   |   Update On 2017-06-25 12:10 GMT
ஊத்துக்கோட்டை அருகே மதுக்கடையை மூடக்கோரி அரசு பஸ் சிறை பிடித்து பொது மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள மெய்யூரில் இருந்த டாஸ்மாக் கடை கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது.

இந்த கடை அருகே உள்ள வேம்பேடு கிராம எல்லையில் அதிகாரிகள் டாஸ்மாக் கடை அமைத்தனர். இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த மதுக்கடை திறக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மதுக்கடை எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென அவர்கள் அவ்வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்தனர்.

அதே நேரத்தில் மதுக் கடைக்கு வந்திருந்த மெய்யூரை சேர்ந்த குடிமகன்கள் 50-க்கும் மேற்பட்டோர் கடையை திறக்க வேண்டும் என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தி டாஸ்மாக் கடை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபா உஷா, ஏ.டி. எஸ்.பி. ஸ்டாலின் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

அவர்கள் பஸ்சை சிறை பிடித்த பொது மக்களிடமும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட குடிமகன்களிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மதுக்கடையும் தற்காலிகமாக மூடப்பட்டது.

Tags:    

Similar News