செய்திகள்

எம்.எல்.ஏ. வீடியோ விவகாரத்தில் சிபிஐ தலையிட முடியாது: கோர்ட்டில் முதல்வர் பழனிச்சாமி பதில் மனு

Published On 2017-06-22 08:26 GMT   |   Update On 2017-06-22 08:26 GMT
எம்.எல்.ஏ. வீடியோ விவகாரத்தில் சிபிஐ தலையிட முடியாது என்று ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவிற்கு கோர்ட்டில் முதல்வர் பழனிச்சாமி பதில் மனு அளித்துள்ளார்.
சென்னை:

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்டது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி வீடியோ ஆதாரம் ஒன்றினை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எம்.எல்.ஏ. வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை அமைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் வித்யாசாகர் ராகவை சந்தித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று கவர்னரும் வீடியோ விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசின் முதன்மை செயலாளருக்கும், சட்டசபை செயலாளருக்கும் கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தார். 



இந்நிலையில், திமுக தொடர் வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஐகோர்ட்டில் இன்று பதில் மனு தாக்கல் செய்தார். அதில், தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவகாரத்தினை சிபிஐ விசாரிக்க முடியாது என்று கூறியிருந்தார். அதேபோல், சட்டபை செயலாளர் தரப்பிலும் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதனையடுத்து முதலமைச்சர் அளித்த பதிலுக்கு விளக்கம் அளிக்க கால அவகாசம் தேவை என்று திமுக சார்பில் உடனடியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்ற நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சுந்தர் கொண்ட அமர்வு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.
Tags:    

Similar News