செய்திகள்

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் மருமகள் விலைக்கு வாங்கிய குழந்தை மீட்பு

Published On 2017-06-22 03:30 GMT   |   Update On 2017-06-22 03:30 GMT
சென்னையில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் மருமகள் விலைக்கு வாங்கிய குழந்தையை தான் பெற்றெடுத்ததாக நாடகம் ஆடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
சென்னை:

சென்னை சேத்துப்பட்டு மனோகரன் தெருவை சேர்ந்தவர் சோமன் (வயது 60). ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி. இவரது மகன் யோகேஷ்குமார் (29). சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு பத்மினி என்ற பட்டதாரி பெண்ணுடன் திருமணம் நடந்தது.

இந்த நிலையில், 10 மாதங்கள் கழித்து தனக்கு பெண் குழந்தை பிறந்ததாக பத்மினி கூறினார். அவர் குழந்தை பெற்றதாக கூறியதை சந்தேகித்த யோகேஷ்குமார் குடும்பத்தினர் இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதில், “எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் குழந்தையை பெற்றுக்கொண்டதாக பத்மினி கூறுகிறார். அங்கு விசாரித்தபோது பத்மினி அங்கு குழந்தை பெற்றுக்கொள்ள சேரவில்லை என்று தெரிவித்தனர். இதற்கான ஆதாரங்களை சேகரித்துள்ளோம். அவர் வைத்து இருப்பது யாருடைய குழந்தை? என கண்டறிய வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. பத்மினி எழும்பூர் பகுதியில் வசித்து வந்ததால் இந்த வழக்கு எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீஸ் விசாரணையின்போது, பத்மினி அந்த பெண்குழந்தையை 10 மாதம் வயிற்றில் சுமந்து, நான் தான் பெற்றெடுத்தேன் என்று பிடிவாதமாக கூறி வந்தார்.

இதனால் கோர்ட்டு உத்தரவின்படி பத்மினிக்கு சென்னை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. 3 டாக்டர்கள் அடங்கிய குழு பத்மினியை பரிசோதித்து அளித்த அறிக்கையில், பத்மினி கருவுற்றதற்கான தடயமோ, குழந்தை பெற்றதற்கான தடயமோ இல்லை என்று தெரிவித்தது.

இதனால், எழும்பூர் அனைத்து மகளிர் போலீசாரும், குழந்தைகள் நல அமைப்பினரும் பத்மினியிடம் இருந்து நேற்றுமுன்தினம் குழந்தையை மீட்டனர். பின்னர், குழந்தையை குழந்தைகள் நல அமைப்பினர் எடுத்து சென்றனர். பத்மினிக்கு அந்த குழந்தை எங்கிருந்து கிடைத்தது? என்று போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

தரகர் ஒருவர் மூலம் அந்த குழந்தையை பத்மினி விலைக்கு வாங்கியதாக கண்டறியப்பட்டது. இதனால் அந்த தரகரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

டெல்லியில் இருந்து அந்த குழந்தையை விலைக்கு வாங்கி ரெயில் மூலம் சென்னை கொண்டு வந்து, பத்மினியிடம் கொடுத்ததாக தரகர் போலீஸ் விசாரணையில் குறிப்பிட்டார். ஆனால், அந்த குழந்தை சென்னையில் ஏதாவது ஒரு மருத்துவமனையில் திருடப்பட்டு பத்மினியிடம் விலைக்கு விற்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

இந்த குழந்தை விலைக்கு விற்கப்பட்டதன் பின்னணியில், ஒரு மோசடி கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக தரகரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே சென்னையில், குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் சம்பவங்கள் நடப்பதாக புகார் உள்ளது. இப்போது, இந்த குழந்தை விஷயத்தில் அது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுபோல் குழந்தைகளை திருடியோ அல்லது கடத்தியோ, விற்பனை செய்யும் கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News