செய்திகள்

வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த லாரி டிரைவருக்கு 3 ஆண்டு சிறை

Published On 2017-06-21 11:16 GMT   |   Update On 2017-06-21 11:16 GMT
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த லாரி டிரைவருக்கு 3 சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே உள்ள அரசாலபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 30). லாரி டிரைவர். இவருக்கும், மோகனாம்பிகை(23) என்பவருக்கும் கடந்த 26.6.2013 அன்று திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே வெங்கடேசன், மோகனாம்பிகையிடம் பெற்றோர் வீட்டில் இருந்து வரதட்சணையாக பணம் வாங்கி வரும்படி கேட்டு துன்புறுத்தி வந்தார். இதற்கு வெங்கடேசனின் தந்தை ராமமூர்த்தி (65), தாய் சாந்தா (55) ஆகியோரும் உடந்தையாக இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 22.2.15 அன்று மோகனாம்பிகை கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி சங்கிலியை தருமாறு கேட்டு வெங்கடேசன் தகராறு செய்தார். மோகனாம்பிகை தர மறுத்தார். உடனே கோபம் அடைந்து அவரை கீழே தள்ளி விட்டார். இதில் மோகனாம்பிகை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன், ராமமூர்த்தி, சாந்தா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் இந்த வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கை நீதிபதி ஜூலியட் புஷ்பா விசாரித்து தீர்ப்பு கூறினார்.

அந்த தீர்ப்பில், மோகனாம்பிகை கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட புகாரில் நேரடியான சாட்சியங்கள் மற்றும் போதிய ஆதாரத்துடன் குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வெங்கடேசனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கில் இருந்து ராமமூர்த்தி, சாந்தா ஆகிய இருவரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News