செய்திகள்

கருணாநிதி அரசியலில் ஈடுபடாததால் பலருக்கு துணிச்சல் ஏற்பட்டுள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2017-05-29 06:41 GMT   |   Update On 2017-05-29 06:41 GMT
தகுதி நிறைந்த தலைவர்களான ஜெயலலிதா மறைந்தது, கருணாநிதி அரசியலில் ஈடுபடாமல் இருப்பதால் பலருக்கு துணிச்சல் வந்துவிட்டது என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாகர்கோவில்:

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பாரதிய ஜனதா மிகவேகமாக வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் இடைவெளியை பூர்த்தி செய்து மாநிலத்தில் முதல்நிலை கட்சியாக உருவாகி வருகிறது. இதனால் தான் பாரதிய ஜனதாவில் தினந்தோறும் ஏராளமானோர் இணைந்து வருகிறார்கள். இன்று பா.ம.க. மாநில துணை தலைவர் காஞ்சி குமாரசாமி, பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளார்.

தமிழகத்தில் புதிய போராட்டங்களை உருவாக்கும் முயற்சியில் பலர் இறங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை பரப்புவது, சந்தர்ப்பம் கிடைக்கும் போது அரசியல் ஆதாயமாக மாற்றுவதும் நடக்கிறது. தகுதி நிறைந்த தலைவர்களான ஜெயலலிதா மறைவு, கருணாநிதி அரசியலில் ஈடுபடாமல் இருப்பதால் பலருக்கு துணிச்சல் வந்துவிட்டது.


சந்தைகளில் மாடு விற்க சில விதிமுறைகளை கொண்டு வந்திருக்கிறார்கள். மாட்டிறைச்சி சாப்பிட கூடாது என யாரும் சொல்லவில்லை. கால்நடைகளை காப்பாற்றும் நடவடிக்கையை, மதத்தோடும் , அரசியலோடும் ஒப்பிடவேண்டாம். கால்நடைகளை காக்கவும், விவசாயிகளின் நலனை பாதுக்காகவுமே பிரதமர் மோடி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

பாலை பொறுத்தவரை அரசு பால் தரம் நிறைந்தது, மற்றபால் தரம் இல்லாமல் போனதற்கு பல காரணம் உண்டு. முன்பு அனைத்து வீடுகளிலும் பசுக்கள் இருந்தன. அந்த வீடுகளுக்கு வருவாயை ஏற்படுத்தி கொடுத்தது. பசுவை பராமரிப்பது சுமை என்ற கருத்தால் அவற்றை அடி மாட்டுக்கு விற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆங்கிலேயர்கள் நம் நாட்டை அடிமைப்படுத்திய போது நம் மக்களை கொத்தடிமைகளாக எடுத்து சென்றார்கள். கப்பலில் மக்களை ஏற்றி செல்லும் போது போதுமான உணவு இல்லாமல் கப்பலில் மடிந்துபோனதாக சரித்திரம் உள்ளது. அதே காலகட்டத்தில் நம் நாட்டு பசுக்களை வதம் செய்து உணவுக்காகவும், தோலாடை,  செருப்புக்காகவும் எடுத்து சென்றார்கள். அதே நிலை மீண்டும் வரக்கூடாது என்பதற்காக கால்நடைகளை பராமரிக்க மத்திய அரசு இந்த திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது.

மேட்டூர் அணை தூர்வாரப்படுவது காலம் தாழ்ந்தது, இருப்பினும் பாராட்டத்தக்கது. மண்பாண்டம் செய்பவர்களுக்கு அந்த மண் கிடைக்க வேண்டும். மணல் வியாபாரிகள் இடைத்தரகர்களாக இருக்க அனுமதிக்க கூடாது.

ஜி.எஸ்.டி. வரி தொடர்பாக வணிகர்கள் எப்போதெல்லாம் மத்திய மந்திரிகளை சந்திக்க கால அவகாசம் கேட்டார்களோ அப்போதெல்லாம் ஏற்பாடு செய்தோம். நாளை நடக்கும் போராட்டம் தேவையற்றது. ஜி.எஸ்.டி. வரி நாடு முழுவதும் உள்ள வி‌ஷயம். பல தவறுகளை சரி செய்யும் முயற்சி.

கருணாநிதி வைரவிழா அவருக்காக நடத்தப்படும் விழா அல்ல. அரசியல் ஆதாயத்துக்காக கருணாநிதிக்கே அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார்கள்.

ரஜினி அரசியலுக்கு வர பல்வேறு கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News