செய்திகள்

அண்ணா பல்கலை. துணைவேந்தரை தேர்வு செய்ய நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் புதிய குழு

Published On 2017-05-27 16:31 GMT   |   Update On 2017-05-27 16:31 GMT
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கு நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்கள் பதவி காலியாக இருந்தது.

இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக துரைசாமி ஆகியோரை கவர்னர் நியமனம் செய்துள்ளார். இருவரும் இன்று பதவியேற்றனர். ஆனால், அண்ணா பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தர் நியமனத்துக்கு பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களை கவர்னர் நிராகரித்துள்ளார்.

அண்ணா பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க மோகன், எபினேசர் ஜெயக்குமார், கருணா மூர்த்தி ஆகிய 3 பேர் பெயர் பரிசீலிக்கப்பட்டது. அவர்களிடம் கவர்னர் நேற்று நேர்காணல் நடத்தினார். ஆனால் கவர்னர் எதிர்பார்த்த அளவுக்கு அவர்களிடம் அதற்கான தகுதி இல்லை எனக் கருதி அந்த 3 பேரையும் தேர்வு செய்யாமல் விட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் புதிய குழு அமைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News