செய்திகள்

எண்ணை நிறுவனம் வரி ஏய்ப்பு: தமிழ்நாடு முழுவதும் 48 இடங்களில் சோதனை

Published On 2017-05-17 05:24 GMT   |   Update On 2017-05-17 05:24 GMT
பிரபல எண்ணை நிறுவனம் பல ஆண்டுகளாக முறையான வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாமல் முறைகேடு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் 48 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
சென்னை:

சமையல் எண்ணை உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பில் முன்னணியில் திகழும் காளீஸ்வரி ரீபைனரி நிறுவனம் சென்னை ராயப்பேட்டை ஒத்தவாடி ஜெகதாம்பாள் காலனியில் செயல்படுகிறது.

இந்த நிறுவனம் உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் எண்ணை வகைகளையும், இதர தயாரிப்புகளையும் ஏற்றுமதி செய்து வருகிறது.

காளீஸ்வரி நிறுவனம் பல ஆண்டுகளாக முறையான வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாமலும், வருமான வரி செலுத்துவதில் முறைகேடு செய்து இருப்பதையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலையில் ராயப்பேட்டையில் உள்ள காளீஸ்வரி நிறுவனத்தின் அலுவலகத்தில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.

காலை 7 மணிக்கு இந்த சோதனை தொடங்கியது. அதிகாரிகள் உள்ளே சென்று கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டனர். உள்ளே செல்லவோ, வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கவோ மறுத்து விட்டனர்.

அலுவலகத்தின் வரவு-செலவு கணக்குகளையும் உற்பத்தி, இருப்பு, விற்பனை போன்ற விவரங்களின் கணக்கை சரி பார்த்து வருகிறார்கள. இது தொடர்பான ஆணங்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அதன் கிளை அலுவலகங்களிலும், டீலர்களின் அலுவலகம், வீடுகளிலும், சென்னை அருகே வேங்கைவாசலில் உள்ள அதன் சுத்திகரிப்பு தொழிற்சாலையிலும் சோதனை நடத்தப்பட்டது. இது தவிர புதுச்சேரி, மும்பை, பெங்களூர், காக்கி நாடா ஆகிய வெளி மாநில நகரங்களிலும் உள்ள காளீஸ்வரி நிறுவனத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்றது.


சென்னையில் மட்டும் 38 இடங்களிலும்,  தமிழ்நாடு முழுவதும் 48 இடங்கள் என இந்தியா முழுவதும் மொத்தம் 54 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகம் தவிர நகரின் பல்வேறு இடங்களில் உள்ள அதன் விற்பனை  நிலையங்கள், சேமிப்பு கிடங்குகள் என 38 இடங்களில் சோதனை நடை பெற்று வருகிறது.

இதே போல் மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, தூத்துக்குடி, திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் உள்ள காளீஸ்வரி நிறுவன அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

இந்த சோதனையில் 500-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய அரசின் தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் சமீப காலமாக சி.பி.ஐ. அல்லது வருமான வரித்துறையினர் சோதனை நடத்தும் போது உள்ளூர் போலீசாரை பயன்படுத்தாமல் மத்திய படை வீரர்களை  பயன்படுத்தி வருகிறார்கள். அதே போல் இன்றும் மத்திய தொழில் பாதுகாப்பு  படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


சோதனை பற்றி வருமான வரித்துறையினர் கூறும்போது, "காளீஸ்வரி நிறுவனம் பல ஆண்டுகளாக முறையான வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாமல் வரி ஏய்ப்பு செய்து வந்துள்ளதால் இந்த சோதனை நடந்து வருவதாக தெரிவித்தனர். சோதனை தொடர்ந்து நீடித்து வருகிறது. சோதனையின் முடிவிலேயே மற்ற விவரங்களை கூற முடியும் என்றும் தெரிவித்தனர்.

ஈரோட்டில் உள்ள காளீஸ்வரி எண்ணை நிறுவன அலுவலகத்திலும் இன்று காலை வருமானவரி சோதனை நடத்தப்பட்டது.ஈரோடு பெருந்துறை ரோட்டில் எம்.எல்.ஆர். வீதியில் உள்ள காளீஸ்வரி எண்ணை நிறுவனத்தின் மொத்த விற்பனையாளர் ரமேஷின் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதேபோல் அவர் நடத்தும் லாட்ஜிலும் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

கோவையில் இருந்து 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள். அடுக்குமாடி குடியிருப்பு வீடு மற்றும் அவர் நடத்தும் லாட்ஜில் சோதனை நடத்தப்பட்டதால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Tags:    

Similar News