செய்திகள்

வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்

Published On 2017-04-28 07:21 GMT   |   Update On 2017-04-28 08:08 GMT
வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழ்நாட்டில் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் விவசாயிகள் பிரச்சனை தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்பி இருந்தது. அதற்கு பதிலளித்து தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு தாக்கல் செய்துள்ள அந்த பத்திரத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. 82 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். அவர்கள் பல்வேறு காரணங்களால் இறந்துள்ளார்கள். உடல்நலக்குறைவு, வயது முதிர்வு, மாரடைப்பு, போன்ற காரணங்களால் மரணம் அடைந்துள்ளார்கள். 30 பேர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துள்ளார்கள்.


மரணம் அடைந்த 82 விவசாயிகள் குடும்பத்துக்கும் மனிதாபிமான உணர்வோடு தலா ரூ. 3 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய விவசாய காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ரூ.623 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தென்னக நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:-

விவசாயிகள் தற்கொலையை தடுக்க தமிழக அரசு தவறி விட்டது. விவசாய கடனை தள்ளுபடி செய்தால் மட்டுமே விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்க முடியும் என்றார்.

சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
Tags:    

Similar News