செய்திகள்

வள்ளுவர் கோட்டம் முன்பு மு.க.ஸ்டாலின் நாளை உண்ணாவிரதம்

Published On 2017-01-20 08:06 GMT   |   Update On 2017-01-20 08:06 GMT
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வரக்கோரி, சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு என்னுடைய தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
சென்னை:

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க சார்பில் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வரக்கோரியும், மத்திய அரசே நேரடியாக அவசர சட்டம் கொண்டு வராததைக் கண்டித்தும் இன்று மாநிலம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் அமைதியான முறையில் வெற்றிகரமாக நடந்திருக்கிறது.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் கருதி காவல்துறையின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து முன் கூட்டியே விடுதலையானாலும், ஜல்லிக்கட்டு நடத்தப்படும் வரை தி.மு.க இப்பிரச்சினையில் அயராது குரல் கொடுக்கும்.

இதற்கிடையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டு வர மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். இது இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. இதைத்தான் திமுக தொடர்ந்து கூறி போராடியும் வருகிறது.

இந்த அவசர சட்டத்தை முன் கூட்டியே மாநில அரசோ அல்லது மத்திய அரசோ கொண்டு வந்திருந்தால் ஐல்லிக்கட்டு பொங்கல் அன்றே சீரும் சிறப்புமாக நடத்தப்பட்டிருக்கும் என்றாலும் இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் அதிமுக அரசு உடனடியாக செய்ய வேண்டும்.

அதே சமயத்தில் இனி எந்த ஆண்டிலும் ஜல்லிக்கட்டு தடைபடாத வகையில் காளைகளை மத்திய அரசும் தன் அறிவிக்கையில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை (21.1.2017) அன்று காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் என்னுடைய தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்து கொள்கிறேன்

தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடு காக்க போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் மீண்டும் ஒரு முறை திமுக சார்பில் நன்றி தெரிவித்து, வாடிவாசலில் காளை மாடுகள் அவிழ்த்து விடப்படும் வரை தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Similar News