செய்திகள்
மு.க.ஸ்டாலின்

தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர்களை அழைத்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Published On 2021-04-09 06:43 GMT   |   Update On 2021-04-09 06:43 GMT
தேர்தல் முடிந்த நிலையில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தமிழ்நாடு முழுவதும் சர்வே எடுத்து மு.க.ஸ்டாலினிடம் தொகுதி வாரியாக வெற்றி நிலவரங்களை எடுத்து கூறி உள்ளார்.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ந்தேதி நடந்து முடிந்தது.

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்தார்.

தேர்தல் முடிந்த நிலையில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தமிழ்நாடு முழுவதும் சர்வே எடுத்து மு.க.ஸ்டாலினிடம் தொகுதி வாரியாக வெற்றி நிலவரங்களை எடுத்து கூறி உள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் அன்பகம் எதிரே உள்ள “ஐபேக்” அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் சென்ற மு.க. ஸ்டாலினுக்கு அங்குள்ள ஊழியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஸ்டாலின்தான் வாராரு.... விடியல் தரப்போராரு என்ற பாட்டுடன் அவரை கைதட்டி வரவேற்றனர். அங்கிருந்த பிரசாந்த் கிஷோர், சபரீசன் ஆகியோருடனும் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்து கொண்டார்.

வெற்றி நிலவரம் தி.மு.க.வுக்கு சாதகமாக இருப்பதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் மிகவும் உற்சாகமாக உள்ளார்.


இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர்கள் ஒவ்வொருவரையும் சென்னைக்கு அழைத்து மு.க.ஸ்டாலின் தற்போது கருத்து கேட்டு வருகிறார்.

வெற்றி நிலவரம் எப்படி இருக்கிறது? தேர்தலில் எவ்வாறு பணியாற்றினீர்கள்? கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது? என்பது குறித்தும் கேட்டறிந்து வருகிறார்.

ஒவ்வொரு தொகுதியின் வேட்பாளர்கள், பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் மு.க.ஸ்டாலினை நேற்று அண்ணா அறிவாலயத்தில் பார்த்தனர்.

இன்று காலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் தி.மு.க. வேட்பாளர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி வருகிறார்கள்.

மற்ற மாவட்டங்களில் உள்ள வேட்பாளர்கள் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுடனும் மு.க.ஸ்டாலின் வெற்றி நிலவரங்களை கேட்டறிகிறார்.
Tags:    

Similar News