செய்திகள்
திருவல்லிக்கேணியில் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

10 ஆண்டு கால ஆட்சியை எங்களுக்கு தாருங்கள்- தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேச்சு

Published On 2021-03-06 03:28 GMT   |   Update On 2021-03-06 03:28 GMT
நல்ல அரசியலை முன்னெடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்று கமல்ஹாசன் கூறினார்.
சென்னை:

சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு பிந்தைய பிரசாரத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 3-ந் தேதி முதல் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று, சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் திரண்டு நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மத்தியில், திறந்த காரில் நின்றவாறு கமல்ஹாசன் பேசியதாவது:-

திருவல்லிக்கேணி எனக்கு புதிதல்ல. குழந்தை நட்சத்திரமாக அறிகமாகி, எல்லோருடைய அன்பையும் பெற்று பின்னர், அடையாளம் தெரியாத சாதாரண குழந்தையாக இங்கு பள்ளியில் படித்தேன். 8-ம் வகுப்பு வரை பல பள்ளிகளில் படித்திருக்கிறேன். பள்ளிகளில் படித்ததை விடவும் வீதிகளில் அதிகம் படித்திருக்கிறேன்.

தமிழனாக என்னுடைய பயணம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு, இங்குள்ள இந்தி தியேட்டரில் படம் பார்த்து, இந்தி படங்களில் நடிக்கச் சென்று இந்தி கற்றுக்கொண்டேன். அதன் பிறகு வந்து, அதை நன்றாக புரிந்துகொண்டு இந்தி ஒழிக என்று கத்துவது எங்கள் வேலை அல்ல. தமிழ் வாழ்க என்று சொல்வதுதான் என் வேலை. இதனை புரிந்துகொண்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன். நான் சொல்வது புரியாதவர்கள் தமிழன் இல்லை.

நல்ல அரசியலை முன்னெடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். சீர்கெட்டு கிடக்கிறது இந்த நேரத்தில் ஏன் அரசியலுக்கு வந்தீர்கள்? என்று கேட்டதற்கு, மிகவும் சீர்கெட்டு இருப்பதால் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்று கூறினேன். அதனால்தான் அனைவரும் வரவேண்டும் என்று சொல்கிறேன்.

விலைக்கு, குத்தகைக்கு சென்றுக்கொண்டிருந்த தமிழ் மக்களை திசை திருப்புவதற்கு வந்தவர்கள், 50 வருட அரசியலை திருப்பிப்போட வேண்டும் என்று முடிவு செய்தது இந்த தலைமுறைதான் என்று நாளைய தலைமுறை சொல்லும். சரித்திரத்தில் இடம் பிடிக்க இதுதான் அற்புதமான நேரம். உங்கள் (மக்கள்) விரலில் ஒரு புள்ளி வைத்தால், சரித்திரத்தில் ஒரு வரி கிடைக்கும். இதை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

எம்மதமும் சம்மதமே என்ற என்னுடைய செய்திதான் என் வாழ்க்கை. தனியாக சாதி பிரித்து, மதம் பிரித்து நான் பேசவில்லை. எந்த இறைவனை கும்பிடுகிறீர்கள்? எந்த சாதி? என்று நான் கேட்டதே கிடையாது. நீங்கள் என் சகோதரன், நான் உங்கள் சகோதரன் அவ்வளவு தான். இப்படி சொல்வதால் ஓட்டு இழப்பு ஏற்படாது. புதிய தலைமுறையினர் பெரியவர்களை அழைத்து, புதியவர்களை வழிநடத்திச் செல்லவேண்டும். அந்த வேலையை உங்களிடம் சேர்ந்து நானும் செய்துகொண்டு இருக்கிறேன்.

நடந்து செல்லும் தூரத்தில் தான் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ளது. இப்போது மலரப்போவது மக்கள் நீதி மய்யம் ஆட்சி அல்ல. மக்களின் ஆட்சி. நாங்கள் யாரையும் வீழ்த்த தேர்தலுக்கு வரவில்லை. வெற்றி பெற வந்திருக்கிறோம். நாங்கள் வைத்திருக்கும் கனவுகளுக்கும், திட்டங்களுக்கும் எங்களுக்கு கிடைக்கவேண்டிய வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

தமிழகத்தை சீரமைக்கவேண்டும் என்று சொல்பவர்கள் வேடிக்கை பார்க்காமல், மாற்றத்துக்கான அற்புதமான நேரம், சரித்திரத்தில் முக்கியமான திருப்பத்தில் நின்றுக்கொண்டிருக்கிறோம் என்ற செய்தியை பரப்புங்கள். 6 மாதத்தில் வித்தியாசம் தெரியும். அதற்கான வாக்குறுதியை கொடுக்கிறேன்.

என்னுடைய வேட்பாளர் ஒருவர், மூத்தவர்களிடம் அமர்ந்து இந்த இடத்தில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை அவர்களும் பட்டியலிட, இவரும் அந்த பட்டியலை பார்வையிட்டு, இதை, இத்தனை காலக்கட்டத்தில் முடித்து கொடுக்கிறோம் என்று பிணைய பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுங்கள். நானும் அதற்கு உத்தரவாதம் கொடுப்பவராக கையெழுத்து போடுகிறேன் என்று சொல்லி வைத்திருக்கிறேன். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் அப்படி செய்யவில்லை என்றால், அவர்களை திரும்பப்பெறுவதற்கு மக்களுக்கு உரிமை இருக்கிறது. அதை கொடுக்கவேண்டிய சட்டங்களை நாங்களே நிறைவேற்றுவோம்.

எங்களுக்கு விமர்சன பயம் இல்லை. அதுவும் சுய விமர்சனத்துக்கு கொஞ்சமும் அஞ்சமாட்டோம். அதற்காக எங்கள் கதவுகள் திறந்து இருக்கும், விமர்சனங்களை வரவேற்கும். இப்படிப்பட்ட அரசு இதுவரை பார்த்தது இல்லை என்று நரைத்த தலைக்காரர்கள் வரை தெரிவிக்கவேண்டும் என்பது தான் எங்கள் ஆசை. அதனை நிறைவேற்றுவோம். அதை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு கொடுங்கள்.

நாங்கள் சொன்ன நல்லதை செய்ய 10 வருடம் தேவைப்படும். இந்த முறை மட்டுமல்ல, அடுத்த முறையும் வாய்ப்பு கொடுக்கவேண்டும். அவ்வளவு வேலை இருக்கிறது. இத்தனை வருடங்களாக கெடுத்ததை 6 மாதத்திலோ, 5 வருடத்திலோ சரி செய்துவிட முடியாது. எங்களிடம் நேர்மை இருக்கிறது. அதை மதித்து எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து நடிகர் கமல்ஹாசன், திருவொற்றியூர் தேரடி பகுதியிலும், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம் சந்திப்பில் வடசென்னை மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினார்.
Tags:    

Similar News