செய்திகள்

குட்கா விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்றுவதா?: ஜி.கே.வாசன் கண்டனம்

Published On 2017-07-25 07:16 GMT   |   Update On 2017-07-25 07:16 GMT
உரிய நடவடிக்கை எடுக்காமல் குட்கா விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்றுவதா? என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் குட்கா, பான்மசாலா, ஜரிதா போன்ற புகையிலை பொருள்கள் விற்பதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை அனைத்து இடங்களிலும் மிக எளிதாக கிடைக்கிறது.

சிறு வியாபாரிகளிடம் இருந்தும், குட்கா உற்பத்தியாளரிடமிருந்தும் கைப்பற்றி, அவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் எய்தவன் எங்கோ இருக்க அம்பை நோவதைபோல உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து வெளிச்சத்துக்கு கொண்டுவர தமிழக அரசு தயங்குகிறது.

குட்கா விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருக்கிறது என்றும், அதில் காவல்துறை அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் முழு தொடர்பு இருப்பதை தெரிவித்தும் அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

குட்கா விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வில்லையே என்று கேட்டால் வருமானவரி துறையினர் எங்களிடம் எந்த ஆதாரங்களையும் அளிக்கவில்லை என்று கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்க கூடிய செய்தியாக இருக்கிறது. அவர்களை காப்பாற்ற நினைப்பது கண்டிக்கத்தக்கது.

அவர்கள் அளித்த ஆவணங்கள் என்ன ஆனது, ஆவணங்கள் இல்லையா? இல்லை திட்டமிட்டு அழிக்கப்பட்டதா? என்பது மர்மமாகவே இருக்கிறது.

இவ்விவகாரத்தில் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உயர்மட்ட விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுதர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News