செய்திகள்

தமிழக அமைச்சரவையில் மேலும் 3 பேருக்கு அமைச்சர் பதவி: எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Published On 2017-05-25 05:35 GMT   |   Update On 2017-05-25 05:36 GMT
தமிழக அமைச்சரவையில் மேலும் 3 பேருக்கு வாய்ப்பு அளிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் அமைச்சரவையில் மாற்றம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் அவரையும் சேர்த்து 31 பேர் மந்திரிகளாக உள்ளனர்.



இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியினரை மீண்டும் சேர்த்துக் கொள்ளும் பட்சத்தில் மந்திரிசபையில் மாற்றம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியானது.

இதையடுத்து தமிழக அமைச்சரவையில் எப்படியும் இடம் பிடித்து விட வேண்டும் என்று சில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முட்டி மோதியபடி உள்ளனர். குறிப்பாக முன்னாள் அமைச் சர்கள் சிலர், மீண்டும் அமைச்சராகும் மோகத்தில் தங்கள் ஆதரவாளர்களை அழைத்துப் பேசி காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

இந்த முன்னாள் அமைச்சர்களின் அரசியல் போட்டியாளர்கள் தற்போது அமைச்சர்களாக இருக்கிறார்கள். எனவே தங்களது எதிர்கால அரசியலை கருத்தில் கொண்டு, மீண்டும் அமைச்சர் ஆவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிர்ப்பந்தமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் அதிருப்தி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலகத்துக்கு சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள்.

தொகுதி பிரச்சினைகள் பற்றி அவர்கள் முதல்வருடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டாலும் உண்மையில் அவர்கள் தங்களுக்கு முக்கிய பதவி கேட்டே சென்றதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க.வில் உள்ள எஸ்.சி.எஸ்.டி. இன எம்.எல்.ஏ.க்களும் ஆலோசனை நடத்தியது எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியாக மாறியுள்ளது.

இந்த நெருக்கடிகள் தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக அமைச்சரவையை மாற்ற முடிவு செய்யப்பட்டது.

அரசியலமைப்பு சட்டப்படி ஒரு மாநிலத்தில் உள்ள மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையில் 15 சதவீதம் பேரை அமைச்சர்களாக நியமனம் செய்யலாம். அந்த அடிப்படையில் தமிழக அமைச்சரவையில் மொத்தம் 35 பேர் மந்திரிகளாக இருக்க முடியும்.

தற்போது 31 பேர்தான் அமைச்சர்களாக உள்ளனர். எனவே மேலும் 4 பேரை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள முடியும். ஆகையால் தமிழக அமைச்சரவையில் 3 பேருக்கு வாய்ப்பு அளிக்க எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை நீக்கவும், அதிருப்தியாளர்களை சமரசம் செய்யவும் 3 பேர் மந்திரிகளாக சேர்க்கப்பட உள்ளனர். விரைவில் இந்த அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 மூத்த தலைவர்கள் அதிருப்தியுடன் இருப்பதால் அவர்களுக்கு கட்சி நிர்வாகத்தில் முக்கிய பதவி வழங்கப்பட உள்ளது.

Tags:    

Similar News