லைஃப்ஸ்டைல்

நட்போடும் உறவோடும் கொண்டாடுவோம்

Published On 2016-10-11 02:41 GMT   |   Update On 2016-10-11 02:41 GMT
நம்முடைய மனக்கசப்புக்களையும், காயங்களையும் முழுவதுமாய் வெளியே தூக்கி எறிவோம். உறவுகளுக்கும், அன்பு உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து வாழ்வை மகிழ்ச்சி ஆக்குவோம்.
பண்டிகைக் காலம் வந்துவிட்டது. குழந்தைகளுக்கு துணியெடுக்க, வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க, விருந்தினர்களை உபசரிக்க, உறவினர்கள் நண்பர்கள் வீட்டிற்கு சென்று வர, என எல்லாவற்றிற்குமே பணம் வேண்டுமே, என்ற டென்ஷன் நம்மில் பலபேரை தொற்றிக்கொண்டிருக்கிறது அல்லவா, ஆனால் உண்மையில் நிதானமாக யோசித்துப்பார்த்தால், பணம் ஒரு முக்கிய விஷயமே அல்ல. நம்முடைய வருவாய்க்கு ஏற்றபடி நம்முடைய செலவை வைத்துக்கொண்டாலே போதும். மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு பார்க்க வேண்டியதில்லை.

முக்கியமாக பார்க்க வேண்டியது. இந்த பண்டிகை நாட்களில் மனக்கசப்பினால் பல மாதங்களாக, ஏன் பல வருடங்களாக பிரிந்துகிடக்கும் நமது நட்புகளையும், எப்படி சேர்த்துக்கொள்ளலாம் அல்லது நாம் சேர்ந்துகொள்ளலாம் என யோசிக்க வேண்டும். மேலும் விழாக்கால கொண்டாட்டங்கள் என்பதே நம்முடைய பண்பாட்டு கலாச்சாரத்தை நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதே என்பதை மறந்துவிடக்கூடாது.

இப்பண்டிகை காலத்தில் நம்மில் வீட்டில் செய்யும் பலகாரங்களை குழந்தைகளின் கையால் மற்றவர்களுக்கு கொடுக்க செய்ய வேண்டும். முடிந்தால் காப்பங்களுக்கு சென்று நம்மால் முடிந்த பொருள் உதவியை அவர்களுக்கு தரலாம். நம் நட்பிலும் உறவிலும் வசதி குறைந்தவர்களுக்கு நாமாகவே முன்சென்று உதவி செய்கிறோம் என்ற பாவனை இல்லாமல், பரிசு பொருட்களாக தருவதைப்போன்று அவர்களுக்கு தேவையானவற்றை கொடுத்து உதவலாம். குழந்தைகளுக்கு இப்பண்டிக்கைக்காலங்களை மையப்படுத்தி உதவும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.

ஒருமணிநேரம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் நம் மனதை செலுத்தினால், நம்முடைய மூளை சோர்வடைந்துவிடும். ஐந்து நிமிடமாவது ஒய்வெடுத்துகொள்ளுங்கள். அல்லது வேறு விஷயங்களில் கவனம் செலுத்துங்கள் என்கின்றனர். இப்படி இருக்கையில் ஆண்டு முழுவதும் வேலை வேலை என எந்திர வாழ்க்கையில் நம்மை தொலைத்துவிடலாமா? எனவே அவ்வபோது நம்மை புத்துணர்ச்சி ஊட்டிக்கொள்ள இருப்பதே இந்த பண்டிக்கை காலங்கள்.

விட்டுக்கொடுப்பதே வாழ்க்கை. பிரிந்துகிடக்கும் உறவுகளில் நியாயம் யார் பக்கம் என பார்க்காதீர்கள்! நீங்களாகவே போய் பேசுங்கள். ஆனந்தம் உங்களுக்கு சொந்தமாகும். இந்த உலகத்தில் எல்லோருமே அன்புக்காக ஏங்குபவர்கள்தான். உங்களுக்கு அன்பு கிடைக்கவில்லையே என்பதைவிட, விழாக்கால கொண்டாட்டங்களில் மற்றவர்களுக்கு நீங்கள் அள்ளிக்கொடுங்கள். அவை உங்களிடம் பன்மடங்காய் திரும்பி வருவதை உணர்வீர்கள்.

நவராத்திரி விழாவில் தீபம் ஏற்றும் ஒவ்வொரு கனப்பொழுதிலும் அனைத்து சிக்கல்களும் பிரச்சனைகளும் தீர்ந்து உள்ளத்திலும் இல்லத்திலும் அற்புதமான மகிழ்ச்சிபெறுஒளி பெருகுவதை உணருங்கள். நாம் குழந்தைகளாக இருக்கும்போழுது, விழாக்கால கொண்டாட்டங்களின்போது நமக்கு இருந்த குதுகலம், ஏன் வயது ஏற ஏற குறைந்துபோனது? ஏனென்றால், எந்த இடைஞ்சலையும், சண்டையையும் உடனே மறந்து, இயல்புக்கு திரும்பும் குழந்தை மணம் நம்மிடம் குறைந்து போனதே. இதை சரியாக புரிந்துகொண்டு நம்முடைய மனக்கசப்புக்களையும், காயங்களையும் முழுவதுமாய் வெளியே தூக்கி எறிவோம். உறவுகளுக்கும், அன்பு உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து வாழ்வை மகிழ்ச்சி ஆக்குவோம்.

Similar News