லைஃப்ஸ்டைல்

பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது மாணவர்களின் கடமை

Published On 2017-05-22 04:01 GMT   |   Update On 2017-05-22 04:01 GMT
ஒவ்வொரு மாணவரும் ஆர்வமுடன் படிக்க வேண்டும். வேறு எந்த பணியும் தராமல், படிக்க மட்டுமே சொல்லும் பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது மாணவர்களின் கடமை.
உயர்கல்வி படிப்பதற்கான அளவீடாக இருக்கும் மதிப்பெண்களை பெறுவதற்கு ஒவ்வொரு மாணவரும் ஆர்வமுடன் படிக்க வேண்டும். வேறு எந்த பணியும் தராமல், படிக்க மட்டுமே சொல்லும் பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது மாணவர்களின் கடமை. ஆனாலும் மாணவர்களிடம் கற்றல் திறன் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. அதற்கு அவர்களின் ஆர்வம், பாடத்திட்டம், பள்ளிச் சூழல் போன்ற பல்வேறு அம்சங்கள் காரணமாக இருப்பதை மறுக்க முடியாது.

தற்போது பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது. இதன் மூலம் மாணவ-மாணவிகள் தாங்களின் கல்வி மதிப்பெண்களை தெரிந்து கொண்டு உள்ளனர்.

இதில் மாணவ-மாணவிகள் எடுத்து உள்ள மதிப்பெண்ணை வைத்து அவர்களை மதிப்பீடு செய்யக் கூடாது. ஆசிரியர் குழு தேர்வு செய்து கொடுத்த வினாக்கள் தேர்வுகளில் கேட்கப்படுகிறது. அதற்கு மாணவ-மாணவிகள் அளித்த பதில்களுக்கு தான் மதிப்பெண் அளிக்கப்படுகிறது. அந்த மதிப்பெண்ணை வைத்து ஒரு மாணவர் திறமை மிகுந்தவர் என்றோ, திறமையே அற்றவர் என்றே கூறி விட முடியாது.

எனவே தேர்வில் கிடைத்த மதிப்பெண் என்பது அந்த தேர்வுக்கான மதிப்பெண் மட்டுமே என்பதை மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லாத நிலையில் மதிப்பெண்ணை மட்டும் வைத்து ஒரு மாணவனை மதிப்பீடு செய்வது எந்த வகையிலும் சரியாக இருக்காது. அதோடு அந்த மதிப்பீடு தவறான ஒன்றாக இருக்கும் என்பதே உண்மை.



வெறும் மதிப்பெண்ணை குறி வைத்து கற்றுத்தரப்படும் கல்வியில் இருந்து மாணவர்களால் எந்த ஒன்றையும் கற்றுக் கொள்ள முடியாது. கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 350 மதிப்பெண் எடுத்த மாணவர் நன்றாக படிப்பவராக பார்க்கப்பட்டார். ஆனால் தற்போது 450-க்கு மேல் மதிப்பெண் எடுக்கிற மாணவரை நன்றாக படிக்கிறவர் என்ற பார்வை பலரிடம் இல்லை.

ஆனால் பாடப்புத்தகத்தை முழுமையாக படிக்கும் திறன் பெற்றவர்களாக மாணவ-மாணவிகள் உள்ளனர். அதனால் தான் மாணவ-மாணவிகளால் அதிக மதிப்பெண் பெற முடிகிறது. கடந்த காலங்களில் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் தான் தவறான முடிவு எடுத்தார்கள் என்ற செய்தி வரும். ஆனால் தற்போது பிளஸ்-2 தேர்வில் 1000-க்கு மேலும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 400-க்கு மேலும் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தவறான முடிவை எடுக்கும் நிலை உள்ளது. இதற்கு மதிப்பெண் மட்டும் தான் வாழ்க்கை என்ற கருத்து திணிக்கப்படுவதே காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

எனவே தான் மதிப்பெண் அடிப்படையில் மாணவ- மாணவிகள் முதலிடம் அறிவிப்பதை தமிழக அரசு இந்த ஆண்டு ரத்து செய்து விட்டது. இது பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
Tags:    

Similar News