வழிபாடு

பக்தர்கள் வெள்ளத்தில் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம்: லட்சக்கணக்கானோர் குவிந்தனர்

Published On 2023-05-04 02:15 GMT   |   Update On 2023-05-04 02:15 GMT
  • சிறிய தேரில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார்.
  • பெரிய தேரில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளினர்.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் காலை வெகுவிமரிசையாக நடந்தது.

நேற்று மீனாட்சி-சுந்தரேசுவரர் தேரோட்டம் நடந்தது. இதற்காக வண்ணத் துணிகளாலும், மலர்களாலும் தேர்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

தேரோட்டத்தையொட்டி மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் அதிகாலையில் கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்து கீழமாசி வீதியில் உள்ள தேரடி மண்டபத்திற்கு வந்தனர். அங்கு உள்ள கருப்பணசாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பெரிய தேரில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளினர். சிறிய தேரில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார்.

தேரோட்டத்தை காண மதுரை மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாசிவீதிகளில் குவிந்திருந்தனர்.

சரியாக காலை 6.33 மணிக்கு பக்தர்கள் ''ஹரகர சுந்தர மகாதேவா'' என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுக்க பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் இருந்த பெரிய தேர் நகர்ந்தது. சிறிது நேரம் கழித்து 6.50 மணிக்கு மீனாட்சி அமர்ந்திருந்த சிறிய தேர் புறப்பட்டது. தேர்களை பக்தர்கள் மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்துடன் இழுத்தனர்.

தேர்களுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானை, 'டங்கா' மாடு ஆகியவை அணிவகுத்து சென்றன. தொடர்ந்து விநாயகரும், முருகனும் சிறிய சப்பரங்களில் சென்றனர்.

தேர்கள், கீழமாசிவீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசிவீதிகளில் வலம் வந்தன. இது கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது.

Tags:    

Similar News