ஆன்மிகம்
மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பாதவிநாயகர் கோவில் முன்பு குவிந்த பக்தர்கள்.

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2019-03-18 06:55 GMT   |   Update On 2019-03-18 06:55 GMT
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் தீர்த்தக்காவடி, மயில்காவடி எடுத்தும், அலகு குத்தி, முடிகாணிக்கை செலுத்தியும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தினமும் பல்வேறு அலங்காரங்கள், அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. மேலும் தினமும் தங்கமயில், வெள்ளி ஆட்டுக்கிடா, பிடாரி மயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா வருவது வழக்கம்.

நேற்று வார விடுமுறை என்பதால் பழனிக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. இதனால் திருஆவினன்குடி, பாதவிநாயகர் கோவில், மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் பழனியில் கடும் வெயில் நிலவுவதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார், மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு சென்றனர். இதனால் அதற்கான நிலையங்களில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

குறிப்பாக மின்இழுவை ரெயிலில் பயணம் செய்ய கவுன்ட்டரையும் தாண்டி மேற்கு கிரிவீதி வரை பக்தர்கள் வரிசையில் நிற்பதை காண முடிந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு செல்லும் பாதைகள், கிரிவீதிகள் என அனைத்து இடங்களிலும் கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. அதேபோல் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் வெயிலால் அவதிப்படுவதை தடுக்க நிழற்பந்தல் போடப்பட்டிருந்தது. 
Tags:    

Similar News