ஆன்மிகம்
வயலூர் முத்துக்குமார சுவாமி சந்திப்பு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

சோமரசம்பேட்டையில் 5 ஊர் சாமிகள் சந்திப்பு நிகழ்ச்சி

Published On 2019-01-23 03:39 GMT   |   Update On 2019-01-23 03:39 GMT
சோமரசம்பேட்டையில் 5 ஊர் சாமிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் வயலூர் முருகன் கோவிலில் நடைபெறும் தைப்பூச திருவிழாவின் மறுநாளில் சோமரசம்பேட்டையில் 5 ஊர் சாமிகள் சந்திப்பு நடைபெறும். அதன்படி வயலூர் முருகன் கோவிலில் நேற்று முன்தினம் தைப்பூச திருவிழா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அன்றிரவு முத்துக்குமாரசாமிக்கு சர்வ அலங்காரத்துடன் மகாதீபாராதனை நடைபெற்று, வயலூர் கோவிலில் இருந்து வரகாந்திடலை சென்றடைந்தார்.

அங்கு மண்டகப்படி பெற்ற பிறகு கீழவயலூர் தைப்பூச மண்டபத்திற்கு வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பாடாகி நள்ளிரவில் வடகாபுத்தூர் கிராமம் வந்து சேர்ந்தார். நேற்று காலை வடகாபுத்தூரில் இருந்து முத்துக்குமாரசாமி புறப்பட்டு சோமரசம்பேட்டை வந்தடைந்தார். அங்கு உய்யகொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர், அல்லித்துறை பார்வதீஸ்வரர், சோழங்கநல்லூர் காசிவிஸ்வநாதர், சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன் ஆகிய சாமிகளும் தத்தமது கோவில்களில் இருந்து அலங்காரத்துடன் புறப்பட்டு சோமரசம்பேட்டை வந்தடைந்தன.

வயலூர் முத்துக்குமாரசாமியின் வருகையை எதிர்பார்த்து நின்ற சாமிகள் ஒவ்வொன்றாக முத்துக்குமாரசாமியுடன் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் 5 ஊர் சாமிகளும் சோமரசம்பேட்டையில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து விட்டு சோமரசம்பேட்டை தைப்பூச மண்டபத்தை வந்தடைந்தன.

அங்கு 5 ஊர் சாமிகளுக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து விட்டு நேற்று இரவு அனைத்து சாமிகளும் தத்தமது கோவிலுக்கு புறப்பட்டு சென்றன. வயலூர் முத்துக்குமாரசாமி சோமரசம்பேட்டை தைப்பூச மண்டபத்தில் இருந்து புறப்பட்டு அதவத்தூர் மண்டபம் சென்றடைந்தார். சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
Tags:    

Similar News