ஆன்மிகம்

முக்தி தரும் அன்னலிங்கம்

Published On 2018-12-11 10:12 GMT   |   Update On 2018-12-11 10:12 GMT
எந்த லிங்கத்தையும் விட, அன்னத்தில் லிங்கம் பிடித்து வைத்து பூசித்தால் பலன் அதிகம். அதனால் தான் இறைவனுக்கு நடத்தப்படும் அன்னாபிஷேகமும் உயர்வு பெறுகிறது.
மகாபாரதத்தில் வரும் அர்ச்சுனன், மிகச் சிறந்த வில்லாளி. அதே நேரத்தில் சிவ பூஜை செய்பவர்களிலும் சிறப்பு பெற்றவனாக இருந்தான். அவனுக்கு ‘தன்னை விட சிறப்பாக சிவ பூஜை செய்பவர், சிறப்பான லிங்கத்தை வைத்து பூசிப்பவர் யாருமில்லை’ என்ற கர்வம் இருந்தது.

அர்ச்சுனன் பாதை மாறிச் செல்லும் வேளையில் எல்லாம், நண்பனாக இருந்து பல அறிவுரைகளைச் சொல்லி நல்வழியில் செலுத்தியவர் கண்ணன். அவருக்கு அர்ச்சுனனின் கர்வம் அறிந்து நகைப்பு தான் வந்தது. அவர் அர்ச்சுனனிடம், “உன்னை விட அதிகமான, உயர்வான லிங்கங்களை வைத்து சிவபூஜை செய்யும் தம்பதியினர் இதே ஊரில் இருக்கின்றனர். அவர்களே சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்” என கண்ணன் கூறினார்.

“அவர்கள் யார்?” என்று கேட்ட அர்ச்சுனனுக்கு, ஒரு குடியானவனையும், அவரது மனைவியையும் காட்டினார் கண்ணன்.

அர்ச்சுனன், மறைவாக இருந்து அந்தக் குடியானவனின் ஒரு நாள் நடவடிக்கைகளை கவனித்தான். அவன் கவனித்த நாளில் ஒரு முறை கூட அந்தக் குடியானவன் சிவபூஜை செய்யவில்லை.

கண்ணனிடம் வந்த அர்ச்சுனன், “குடியானவன் சிவபூஜையே செய்யவில்லை. அவர்களின் வீட்டில் சிவலிங்கமே இல்லை” என்றான்.

புன்னகை புரிந்த கண்ணன், “நீ அங்கே கவனித்த போது, அவர்கள் எப்போதாவது வழிபாடு செய்தார்களா?” என்றார்.



“ஆம்.. ஒரு முறை மட்டும் தம்பதியராக நின்று சாதம் வடித்த பானையை வழிபட்டனர்” என்றான் அர்ச்சுனன்.

உடனே கண்ணன் “உலக ஜீவ ராசிகளின் பசிப்பிணி தீர்க்க பொன்மணி தேவையா? அரிசிமணி தேவையா?” என்றார்.

“அரிசி தான் பொன்னை விட உயர்ந்தது. அதனால் தான் அரிசியும் சிவனும் ஒன்று என்ற பழமொழி வந்தது” என்று கூறினான் அர்ச்சுனன்.

“அப்படியானால் ஒரு அன்னப் பருக்கை ஒரு லிங்கத்திற்கு சமம் தானே?”

கண்ணனின் கேள்வியை ‘ஆம்’ என்று ஒப்புக் கொண்டான் அர்ச்சுனன்.

“அந்த தம்பதியர் வணங்கிய சாதம் வடித்த பானையில் எத்தனை ஆயிரம் லிங்கங்கள் இருந்திருக்கும். அத்தனை லிங்கங்களை வணங்கிய அவர்கள் தானே, சிறந்த சிவ பக்தர்கள்” என்று கூறிய கண்ணனின் கிடுக்கிப்பிடியில் திணறிப்போனான் அர்ச்சுனன். அவனது கர்வம் தவிடுபொடியாகிப்போனது.

எந்த லிங்கத்தையும் விட, அன்னத்தில் லிங்கம் பிடித்து வைத்து பூசித்தால் பலன் அதிகம். அதனால் தான் இறைவனுக்கு நடத்தப்படும் அன்னாபிஷேகமும் உயர்வு பெறுகிறது.

தினமும் வீட்டில் சாதம் செய்த பின், அது வேகவைக்கப்பட்ட பானையில், விபூதி பட்டையிட்டு சிறிது பூவும் வைத்து, கிழக்கு நோக்கி நின்று தம்பதிகளாக வணங்கினால் இம்மை, மறுமை இரண்டிலும் இறைவன் அருள் கிடைக்கும்.
Tags:    

Similar News