ஆன்மிகம்
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் தேரோட்டம்

Published On 2018-04-30 05:50 GMT   |   Update On 2018-04-30 05:50 GMT
சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்திபெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியையொட்டி பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவிலும் வெவ்வேறு வாகனங்களில் தேவநாதசுவாமி எழுந்தருளி சாமி வீதி உலா நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி மூலவரான தேவநாதசுவாமிக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்கும் பால், தேன், இளநீர் உள்ளிட்ட பலவிதமான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் உற்சவ மூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேவநாதசுவாமி, கோவில் அருகில் தயார் நிலையில் இருந்த தேரில் எழுந்தருளினர். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய விதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் நிலையை வந்தடைந்தது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜா சரவணகுமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். பூஜைக்கான ஏற்பாடுகள் ஜெயபிரகாஷ் பட்டாச்சாரியார் தலைமையில் செய்யப்பட்டிருந்தது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் போலீசார் பாகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
Tags:    

Similar News