ஆன்மிகம்
உடுமலை மாரியம்மன் கோவில் வளாகத்தில் தேர்த்திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்

Published On 2018-03-31 04:09 GMT   |   Update On 2018-03-31 04:09 GMT
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது. மேலும், தேரை அலங்கரிக்கும் பணியை தொடங்குவதற்காக தேரில் ஆரக்கால் நடப்பட்டு பூஜை நடைபெற்றது.
உடுமலையில் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 20-ந் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி யுடன் தொடங்கியது. 27-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிலையில் நேற்று மதியம் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. கொடிமரத்திற்கும், கொடிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேரை அலங்கரிக்கும் பணியை தொடங்குவதற்காக நேற்று தேரில் ஆரக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்த நிகழ்ச்சிகளுக்கு கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தேர்த்திருவிழாவையொட்டி தேரில் ஆரக்கால் நடப்பட்ட காட்சி.

இதன் பின்னர் மதியம் பக்தர்கள் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இரவு 7 மணிக்கு அம்மன் புஷ்ப அலங்காரத்துடன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. தேர்த்திருவிழாவையொட்டி தினசரி இரவு குட்டை திடலில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவில் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு கோவில் கலையரங்கில் கரூர் குமாரசுவாமிநாதன் குழுவினரின் தெய்வீக திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு குட்டை திடலில் பட்டிமன்றமும் நடைபெறுகிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7 மணிக்கு கோவில் கலையரங்கில் சொற்பொழிவு நடக்கிறது. இதில் மதுரை சொ.சொ.மீ.சுந்தரம் பக்தி சொற்பொழிவாற்றுகிறார். குட்டை திடலில் 7 மணிக்கு கிருஷ்ண லீலா பரதநாட்டிய நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி, 2-ந் தேதி இரவு இன்னிசை நிகழ்ச்சியும், 3-ந் தேதி இரவு கலை நிகழ்ச்சியும், 4-ந் தேதி இரவில் பரதநாட்டிய நிகழ்ச்சியும், 6-ந் தேதி இரவு வாணவேடிக்கை ஆகியவையும் நடக்க உள்ளது.
Tags:    

Similar News