ஆன்மிகம்

பழனி முருகன் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை இன்று தொடங்குகிறது

Published On 2017-12-16 04:18 GMT   |   Update On 2017-12-16 04:18 GMT
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில், மார்கழி மாத பிறப்பையொட்டி இன்று (சனிக்கிழமை) முதல் அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு நடைபெறுகிறது. இதேபோல் திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன், லட்சுமிநாராயணபெருமாள், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் அடுத்த மாதம் (ஜனவரி) 13-ந்தேதி வரை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு நாளும் அதிகாலை 4.30 மணிக்கு மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதையடுத்து காலை 6.40 மணிக்கு விளாபூஜை, 8 மணிக்கு சிறுகால சந்தி, 9 மணிக்கு கால சந்தி, பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை, இரவு 8.30 மணிக்கு ராக்கால பூஜை ஆகியவை நடைபெறுகிறது. தினசரி நடைபெறும் மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி பூஜைகளில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

அதேபோல், பெரியநாயகி அம்மன் கோவிலில் வருகிற 24-ந்தேதி மாலை சாயரட்சை பூஜையில் காப்புக்கட்டுதலுடன் திருவாதிரை உற்சவம் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவையொட்டி தினசரி பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று தீபாராதனை காட்டப்படும்.

அடுத்த மாதம் 1-ந்தேதி பவுர்ணமி தினம் ஆகும். அன்றைய தினம் இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியும், மறுநாள் ஆருத்ரா தரிசனமும், அதிகாலை 4 மணிக்கு ஊர்க்கோவிலில் நடராஜர் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், நான்கு ரத வீதிகளில் நடராஜர்-அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று மார்கழி மாத பூஜை தொடங்குகிறது. பின்னர் 20-ந் தேதி திருவத்யன பகல்பத்து உற்சவம் நடக்கிறது. 29-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. இதேபோல் பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

29-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் பரமபத வாசல் திறப்பும், சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. மார்கழி மாத சிறப்பு பூஜை நிகழ்ச்சிகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News