ஆன்மிகம்
சபரிமலை கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்ததை படத்தில் காணலாம்.

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Published On 2017-12-12 03:25 GMT   |   Update On 2017-12-12 03:25 GMT
சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் 16 மணி நேரம் காத்திருந்த பிறகே சாமி தரிசனம் செய்ய முடிகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 15-ந்தேதி மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் நாளில் இருந்தே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தமிழகம், கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த பக்தர்கள் அதிகளவு சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். சபரிமலையில் சிலநாட்கள் கனமழை பெய்ததால் பக்தர்கள் கூட்டம் சற்று குறைந்தது. தற்போது மீண்டும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சபரிமலையில் நேற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இதனால் 16 மணிநேரம் காத்திருந்த பிறகுதான் பக்தர்களால் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. பம்பையில் இருந்தே பக்தர்களை கட்டுப்படுத்தி வரிசையில் அனுப்பும் நிலை ஏற்பட்டது. இதனால் போலீசார் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.


சன்னிதானம் பகுதியில் இருமுடி கட்டுகளை தலையில் சுமந்து காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

பத்தினம்திட்டா அருகே கோட்டூர் பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு முண்டோனி பகுதியில் ஆதிவாசிகள் அதிகளவு வசித்து வருகிறார்கள். இவர்களது குலதெய்வம் சுவாமி ஐயப்பன் ஆகும். தங்கள் குருசாமியாக அகத்திய முனிவரை ஏற்றுக்கொண்டவர்கள். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பாதயாத்திரையாக சபரிமலை வந்து மண்டல பூஜையின் போது ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.

நேற்று முன்தினம், ஆதிவாசிகள் கிராமத்தை சேர்ந்த 22 குழந்தைகள், 7 பெண்கள் உள்பட 97 பேர் சபரிமலைக்கு வந்தனர். அவர்கள் மலைத்தேன், காட்டுப்பூக்கள், பழங்களுடன் வருகை தந்தனர். அவர்களை போலீசாரும், அதிகாரிகளும் வரவேற்று அழைத்து சென்று சாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தனர். இவர்கள் வரிசையில் காத்திருக்காமல் சிறப்பு தரிசனம் செய்தனர்.

சபரிமலையில் வருகிற 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. மண்டல பூஜை நெருங்குவதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும். இதனால் சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News