ஆன்மிகம்
வரதய்யங்கார்பாளையத்தில் அய்யா வைகுண்டர் கோவில் தேர் பக்தர்கள் வெள்ளத்தில் வந்த போது எடுத்த படம்.

அய்யா வைகுண்டர் சிவபதியில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2017-10-03 03:42 GMT   |   Update On 2017-10-03 03:42 GMT
வரதய்யங்கார்பாளையத்தில் உள்ள அய்யா வைகுண்டர் சிவபதியில் தேரோட்டம் நடைபெற்றது. இதில்ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை சரவணம் பட்டியை அடுத்த வரதய்யங்கார்பாளையத்தில் அய்யா வைகுண்டர் சிவபதி உள்ளது. இங்கு தேர்த்திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் உகப்படிப்பு, உச்சிப் படிப்பு மற்றும் பாராயணம், மாலையில் ஆன்மிக சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் கற்கண்டு, பேரீச்சம்பழம், இனிப்பு வகைகள், அனைத்து வகையான பழங்கள் ஆகியவற்றை கொண்டு வந்து அய்யாவுக்கு பக்தர்கள் பூஜை செய்தனர். பின்னர் அவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று காலை 11.30 மணிக்கு அய்யா வைகுண்டர் பல்லக்கில் எழுந்தருளி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் பிரவேசித்தார்.

பிற்பகல் 2 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை கோவை மாவட்ட நாடார் சங்க துணை செயலாளர் பொன்.செல்வராஜ் தொடங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பய பக்தியுடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

தேரோட்டத்தின் போது பெண்கள் கோலாட்டம் ஆடியும், சிறுமிகள் குழு நடனமாடியும், ஹரஹர சங்கரா என கோஷமிட்டும் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் அரிராமன், ராமநாதன், சிவகிருஷ்ணன், கணபதி நாராயணன், குமார், குமாரவேல் பிச்சை, பாலசுப்பிரமணியன், முருகேசன், சுரேஷ்குமார், சுந்தரபாலன், சிவலிங்கம், கோவை வடக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி செயலாளர் வேலுமயில், விநாயகபுரம் மகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News