ஆன்மிகம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆடி களப பூஜை நாளை தொடங்குகிறது

Published On 2017-07-17 05:47 GMT   |   Update On 2017-07-17 05:47 GMT
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி களப பூஜை விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி தினமும் காலை 10 மணிக்கு உச்சிகால தீபாராதனையும், அதன்பின்னர் தாணுமாலயசாமிக்கும், திருவேங்கட விண்ணவ பெருமாளுக்கும் சந்தனம், கலபம், கற்பூரம் ஆகியவற்றால் களப அபிஷேகம் நடைபெறுகிறது. களப அபிஷேகம் முடிந்த பின்னர் 4 முறை ஸ்ரீபூத பலியும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

களப அபிஷேகத்தின் நிறைவு நாளான 30-ந் தேதி காலை 9.30 மணிக்கு உதய அஸ்தமன பூஜையும், மகா கணபதிஹோமமும் நடக்கிறது.



மேலும், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் நாளில் நடக்கும் ஆடி கற்கடக ஸ்ரீபலி இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்நாளில் சூரியன் மிதுன வீதியில் வலம் வருகிறார். கிழக்கு திசையில் இருந்து தென்கிழக்கு திசைக்கு சூரியன் இடமாறுவதால் பருவகால மாறுதல்கள் ஏற்படும். இதனால், உடல் மற்றும் மனநிலைகளில் மாற்றம் ஏற்படுகிறது.

இந்த நாட்களில் கோவில்களில் நடைபெறும் இறைவழிபாட்டில் கலந்து கொண்டால் உற்றார் உறவினர்கள் இடையே உறவு வலுப்படும் என்பது ஐதீகம். நவக்கிரக குற்றத்தால் தடை ஏற்படாமல் முழுமையான பலனும் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. இதையொட்டி இன்று காலை 9 மணிக்கு தாணுமாலசாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ருத்ர ஜெபத்துடன் மகா தாரை அஷ்டாபிஷேகமும், 11 மணிக்கு தீபாராதனையும், மாலை 6.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சிவனும், கருட வாகனத்தில் பெருமாளும் கோவிலை மூன்று முறை வலம் வரும் ஸ்ரீபலி விழாவும் நடக்கிறது.
Tags:    

Similar News