ஆன்மிகம்
தாமிரபரணி ஆற்றில் நெல்லையப்பருக்கு கொட்டும் மழையில் தீர்த்தவாரி நடந்த போது எடுத்த படம்.

நெல்லை தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி: வசந்த திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2017-05-11 05:54 GMT   |   Update On 2017-05-11 05:54 GMT
நெல்லையப்பர் கோவில் திருவிழாவையொட்டி நெல்லை தாமிரபரணி ஆற்றில் கொட்டும் மழையில் தீர்த்தவாரி நடந்தது. வசந்த திருவிழா இன்று தொடங்குகிறது.
நெல்லை நெல்லையப்பர் கோவிலில் சித்ராபவுர்ணமி திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அஸ்திரதேவர், அஸ்திர தேவிக்கு கும்ப பூஜையும், சிறப்பு பூஜையும், அலங்கார தீபாராதனையும் நடந்தது.

இதைத்தொடர்ந்து பகல் 1 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் இருந்து சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அஸ்திரதேவர், அஸ்திர தேவி ஆகிய மூர்த்திகளுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மேளதாளம் முழங்க தாமிரபரணி ஆற்றுக்கு புறப்பட்டனர்.



 ஹைரோடு, ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பாலம் வழியாக கைலாசபுரம் சென்று தாமிரபரணி ஆற்றில் உள்ள தைப்பூச மண்டபத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. அஸ்திரதேவர், அஸ்திர தேவிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தைப்பூச மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் கோவிலை சென்றடைந்தனர்.

நெல்லையப்பர் கோவிலில் இன்று(வியாழக்கிழமை) வசந்த திருவிழா தொடங்குகிறது.
Tags:    

Similar News