இஸ்லாம்
இஸ்லாம்

மனிதனை இறைவன் படைத்தது ஏன், எதற்காக?

Update: 2022-03-03 04:32 GMT
தவறுகளில் இருந்தும், பாவங்களில் இருந்தும் நம்மை விலக்கிக் கொள்வோம். இறைவன் காட்டிய வழியில் வாழ்ந்து, இறைவனின் திருப்பொருத்தத்தை நாம் அடைய முயற்சி செய்வோம், ஆமீன்.
இந்த உலக வாழ்க்கை இன்பங்களால் நிரம்பியது. ஆனால் அந்த இன்பங்களின் மூலம் இறைவன் நம்மை சோதிக்கிறான் என்பதை மனிதர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மனிதனை இறைவன் படைத்தது ஏன், எதற்காக?

மனிதன் தன்னை வணங்க வேண்டும், தான் காட்டிய வழியில் வாழ்ந்து இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டும் என்பதே அல்லாஹ்வின் கட்டளை, நோக்கம்.

பூமியில் பிறந்த மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை தனது தூதர்கள் மூலமும், மனிதகுலத்திற்கு வழிகாட்டியான திருக்குர்ஆன் மூலமும் அல்லாஹ் விளக்கி இருக்கின்றான்.

ஆனால், மனிதர்களாகிய நாம் என்ன செய்கிறோம், நமது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்கிறோம் என்பது சிந்திக்கத்தக்கது.

இருப்பினும், நாம் எத்தனை தவறுகள் செய்தாலும், பாவங்கள் செய்தாலும் நம்மை மன்னிக்கும் குணமும், கருணையும் கொண்டவனாக அல்லாஹ் இருக்கின்றான். சர்வ வல்லமை உள்ள அல்லாஹ் கருணை மிக்கவன் என்பதை பல்வேறு திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் நாம் அறியலாம். அல்லாஹ்வின் கருணைகளில் மிகவும் முக்கியமானது இந்த உலகத்தை படைத்து, அது எப்படி இயங்க வேண்டும் என்று செயல்படுத்தி வருவது ஆகும். இதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“நிச்சயமாக வானங்களையும் பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறிக் கொண்டிருப்பதிலும், மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்தில் இருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி வைத்து அதன்மூலம் பூமியை அது (வறண்டு) இறந்தபின் உயிராக்கி வைப்பதிலும், அதில் ஒவ்வொரு விதமான (ஊர்ந்து திரியும்) பிராணியை பரவ விட்டிருப்பதிலும், காற்று களைப் பலவாறாகித் திருப்பிவிட்டுக் கொண் டிருப்பதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் மேகத் திலும் சிந்திக்கும் சமூகத்தவர்க்கு சான்றுகள் இருக்கின்றன”. (திருக்குர்ஆன் 2:164)

அல்லாஹ் மீது நம்பிக்கையும், இறையச்சமும் கொண்டவர்களின் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று அறிந்த போதிலும் பெரும்பாலான மனிதர்கள் அதை பின்பற்ற ஆர்வம் காட்டுவதில்லை. உலக வாழ்க்கையில் நிரம்பி கிடக்கும் இன்பங்களின் மீதே மனிதனின் மனம் லயித்துக்கிடக்கிறது.

பணம், சொத்துக்கள், பதவி, அழகு, ஆசை, பொறாமை... என்று பல்வேறு வகையில் மனித மனம் அலைபாய்கிறது. இதன் காரணமாக அவன் பாவச்செயல்களில் ஈடுபடுகின்றான். இறைவனுக்கும், இறை கட்டளைக்கும் மாறு செய்கின்றான். இதனால் இறைவனின் கோபத்திற்கும், சாபத்திற்கும் அவன் ஆளாகிறான்.

அதுபோன்ற சூழ்நிலையில் பலர் மனந்திருந்தி, தான் செய்த தவறுகளுக்கு இறைவனிடம் அழுது மன்றாடி மன்னிப்பு கேட்பதுண்டு. அவ்வாறு தன்னிடம் மன்னிப்பு கேட்பவர்களை மன்னிக்கும் பெருங்கருணை மிக்கவன் அல்லாஹ். இதை திருக்குர்ஆனில் இவ்வாறு இறைவன் சுட்டிக்காட்டியுள்ளான்:

“ஒருவர் தீய செயல்புரிந்து, அல்லது தனக்குத்தானே அநீதி இழைத்துக் கொண்டு பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை யாளனாகவும் இருப்பதை அவர் காண்பார்”. (திருக்குர்ஆன் 4:110).

தவறுகளில் இருந்தும், பாவங்களில் இருந்தும் நம்மை விலக்கிக் கொள்வோம். இறைவன் காட்டிய வழியில் வாழ்ந்து, இறைவனின் திருப்பொருத்தத்தை நாம் அடைய முயற்சி செய்வோம், ஆமீன்.

பேராசிரியர் அ. முகமது அப்துல்காதர், சென்னை.
Tags:    

Similar News